

மதுரை:
மதுரை மின்பகிர்மான மேற்பார்வை பொறியாளர் சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மழை காலங்களில் அறுந்து கிடக்கும் மின்சார கம்பி மற்றும் பழுதடைந்த மின் கம்பங்களை தொட வேண்டாம். இடி, மின்னலின்போது டி.வி., மிக்சி, கிரைண்டர், கணினி, செல்போன் போன்றவற்றை பயன்படுத்த வேண்டாம். திறந்த நிலையில் உள்ள ஜன்னல், கதவு அருகில் நிற்கக்கூடாது. ஈரமான கையுடன் சுவிட்சுகள் மற்றும் பிளக்குகள் போன்றவற்றை இயக்குதல் கூடாது.
மின் கம்பத்திலோ, அவற்றை தாங்கும் கம்பியிலோ கால்நடைகளை கட்ட வேண்டாம். அதில் கொடி, கயிறு கட்டி துணிகளை காயவைக்கும் செயல்களையும் தவிர்க்கவும்.
மழையின்போது மின் மாற்றிகள், மின் கம்பங்கள், மின் பகிர்வு பெட்டிகள், இழுவை கம்பிகள் ஆகியவற்றின் அருகே செல்ல வேண்டாம். பிரிட்ஜ், கிரைண்டர் போன்ற வீட்டு உபயோக மின்சாதனங்களுக்கு நில இணைப்புடன் கூடிய 3 மின் பிளக்குகள் மூலமாக மட்டுமே மின் இணைப்பு கொடுத்திருக்க வேண்டும். குளியல், கழிப்பறைகளில் சுவிட்சுகள் பொருத்துவதை தவிர்க்க வேண்டும். இடிமின்னலின்போது மின் கம்பிகள், மின் கம்பங்கள், மரங்கள், உலோக கம்பிவேலி போன்றவையின் கீழ் நிற்கக்கூடாது.
மின்னல் தாக்கும்போது திறந்த வெளியில் நிற்கக்கூடாது. உடனடியாக கான்கிரீட் கூரையிலான கட்டிடம், கார், வேன் போன்ற வாகனங்களில் தஞ்சமடைய வேண்டும். தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளை விட்டு விலக வேண்டும். மின்சார கம்பிகள் அறுந்து விழுந்தால் அதன் அருகில் செல்லாமல் உடனடியாக மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
மின்சார வயர்கள் பதிக்கப்பட்டுள்ள சுவர்களில் ஆணி அடிக்க வேண்டாம். மின்சாரத்தால் தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக மெயின் சுவிட்சை அணைக்க வேண்டும். அந்த தீயை தண்ணீர் கொண்டு அணைக்கக் கூடாது. உலர்ந்த மணல், கம்பளி போர்வை, உலர்ந்த ரசாயன பொடி, கரியமில வாயு தீயணைப்பான்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.