இரணியல் அருகே இன்று காலை மின்சாரம் தாக்கி லாரி டிரைவர் பலி

இரணியல் அருகே மின்சாரம் தாக்கி லாரி டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார். மனைவியை காப்பாற்ற முயன்றபோது இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.
இரணியல் அருகே இன்று காலை மின்சாரம் தாக்கி லாரி டிரைவர் பலி
Published on

இரணியல்:

இரணியல் அருகே தலக்குளம் குலாலர் தெருவைச் சேர்ந்தவர் சேகர், (வயது 35), லாரி டிரைவர். இவரது மனைவி சுனிதா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். நேற்றிரவு இவர்கள் வழக்கம்போல் தூங்கச் சென்றனர். இன்று அதிகாலை சுனிதா கண் விழித்தார். வீட்டின் பின்பக்க கதவை திறந்து வெளியே வந்தார். அப்போது எதிர்பாராத விதமாக வீட்டின் பின்புறம் துணியை உலர வைப்பதற்காக கட்டப்பட்டிருந்த கயிற்றின் மீது சுனிதாவின் கை பட்டது.

அந்த கயிற்றில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்ததால் சுனிதா தூக்கி வீசப்பட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு வீட்டிற்குள் இருந்து சேகர் ஓடி வந்தார். மின்சாரம் தாக்கிய மனைவி சுனிதாவை காப்பாற்றினார். அப்போது எதிர்பாராத விதமாக சேகர், அதே கயிற்றின் மீது தவறி விழுந்தார்.

இதில் அவரது மீதும் மின்சாரம் பாய்ந்தது. கணவன், மனைவி இருவரின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.உடனடியாக அந்த பகுதியினர் மின் இணைப்பை துண்டித்தனர். அதற்குள் சேகர் பரிதாபமாக இறந்தார்.

கணவரின் உடலை பார்த்து சுனிதா கதறி அழுதார். சேகர் பலியானது குறித்து இரணியல் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ராபர்ட் ஜெகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பிணமாக கிடந்த சேகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மனைவியை காப்பாற்ற முயன்றபோது கணவர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com