

கோவை:
கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள சோமனூர் ஆர்.கே. மில் ரோட்டை சேர்ந்தவர் காமாட்சி (வயது 60). சலவை தொழிலாளி. இவரது மனைவி முனியம்மாள் (55).
நேற்று மாலை வீட்டில் இருந்த முனியம்மாள் சுவிட்ச் போட்டார். அப்போது அதில் மின் கசிவு ஏற்பட்டு முனியம்மாளை தூக்கி வீசியது. இதில் அதிர்ச்சியடைந்த அவர் சத்தம் போட்டார். மனைவியின் சத்தம் கேட்டு வீட்டுக்குள் ஓடி வந்து காமாட்சி மனைவியை தேடினார். அப்போது வீடு இருட்டாக இருந்ததால் தெரியவில்லை.
இதனால் லைட் போடுவதற்காக காமாட்சியும் சுவிட்சை போட்டார். அப்போது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசியது.
இதில் கணவன்- மனைவி இருவரும் உயிருக்கு போராடினர். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் காமாட்சி பரிதாபமாக இறந்தார். முனியம்மாளுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இது குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.