வயலில் அறுந்துகிடந்த மின்வயரை மிதித்ததால் மின்சாரம் தாக்கி தாய்-பிளஸ்-2 மாணவன் பலி

வந்தவாசியில் மின்சாரம் தாக்கி தாய், பிளஸ்-2 மாணவன் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சுமதி - மணிகண்டன்
சுமதி - மணிகண்டன்
Published on

வந்தவாசி:

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த செம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 38). கட்டிட மேஸ்திரி. இவருடைய மனைவி சுமதி (32). இவர்களது ஒரே மகன் மணிகண்டன் (16). அங்குள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவர்கள், கறவை மாடுகளையும் பராமரித்து வந்தனர்.

இந்த நிலையில், கார்த்திக் வேலை நிமித்தமாக நேற்று வெளியூர் சென்றிருந்தார். வீட்டு அருகே அத்திப்பாக்கம் சாலையில் உள்ள விவசாய நிலத்தில் மேய்ச்சலுக்காக விடப்பட்டிருந்த தங்களது கறவை மாடுகளை வீட்டிற்கு ஓட்டி வருவதற்காக நேற்றிரவு 7 மணியளவில் தாய் சுமதி, மணிகண்டன் சென்றனர்.

அப்போது, வயல் வரப்பில் அறுந்து கிடந்த மின்சார கம்பியை கவனிக்காமல் இருவரும் மிதித்தனர். இதில் மின்சாரம் தாக்கியதில் தாயும், மகனும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர். இரவு நேரம் என்பதால் 2 பேரும் பலியான தகவல் அப்பகுதி மக்களுக்கு தெரியவில்லை.

இன்று காலை அந்த வழியாக சென்ற சிலர், சுமதியும், அவருடைய மகனும் மின்சாரம் தாக்கி இறந்துகிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். கிராம மக்கள் ஏராளமானோர் சம்பவ இடத்தில் திரண்டு உடல்களை பார்த்து கதறி அழுதனர்.

தகவலறிந்ததும், வந்தவாசி வடக்கு இன்ஸ்பெக்டர் கவுரி, சப்-இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே, மின்வாரிய நிர்வாகத்தை கண்டித்து கிராம மக்கள், விவசாயிகள் வந்தவாசி-திண்டிவனம் சாலையில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

டி.எஸ்.பி. பொற்செழியன் மற்றும் போலீசார் சமரசம் செய்தனர். இதையடுத்து, மறியலை கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர். இதன்காரணமாக, ஒருமணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com