தலைவாசல் அருகே மின்சாரம் தாக்கி தூய்மை பணியாளர் பலி

தலைவாசல் அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த தூய்மை பணியாளர் மின்சாரம் தாக்கி பலியானார்.
உயிரிழப்பு
உயிரிழப்பு
Published on

தலைவாசல்:

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே வரகூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியான் மகன் ராமர் (வயது 40). இவர் வரகூர் ஊராட்சியில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்தார். நேற்று மாலை 4 மணிக்கு கிராமத்தின் கிழக்கு பகுதியில் ஓடை அருகே சிறுநீர் கழிக்க சென்றார். அப்போது அந்த பகுதியில் அறுந்து கிடந்த உயர்அழுத்த மின்கம்பியை அவர் எதிர்பாராதவிதமாக மிதித்து விட்டதாக தெரிகிறது. இதில் மின்சாரம் தாக்கி உடல் கருகி சம்பவ இடத்திலேயே ராமர் பலியானார்.

ராமர் இறந்து கிடந்ததை அந்த பகுதியில் சென்ற விவசாயிகள் பார்த்து வரகூர் ஊராட்சி தலைவர் ராமசாமிக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர் உடனே மின்வாரிய அதிகாரிக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் மின்வாரிய ஊழியர்கள் விரைந்து வந்து மின் இணைப்பை துண்டித்தனர். தகவலறிந்த தலைவாசல் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ராமர் உடலை ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தலைவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரவேல் பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வரகூர் கிராம நிர்வாக அலுவலர் கீதா நேரில் பார்வையிட்டு தலைவாசல் வருவாய் ஆய்வாளர் மணி, ஆத்தூர் தாசில்தார் அன்பு செழியன் மற்றும் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். மின் கம்பி எப்படி அறுந்து விழுந்தது? என மின்வாரிய அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

பலியான ராமர் திருமணமாகாதவர். இறந்த மகனின் உடலை பார்த்து தாய் பெரியம்மாள் கதறி அழுத காட்சி பரிதாபமாக இருந்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com