

கெய்ரோ:
எகிப்து நாட்டில் அதிபர் தேர்தல் நடந்து வருகிறது. இதற்கான ஓட்டு பதிவு கடந்த திங்கட்கிழமை தொடங்கி நேற்று வரை பல்வேறு கட்டங்களாக நடந்தன.
இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் அப்தெல் ஃபாட்டா அல்-சிசி மீண்டும் போட்டியிடுகிறார். முக்கிய எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் சிலர் சிறையில் உள்ள நிலையில், பல்வேறு கட்சிகள் இந்த தேர்தலை புறக்கணித்துள்ளன. இதனால், அல்-சிசியை எதிர்த்து முக்கிய பிரமுகர்கள் யாரும் போட்டியிடவில்லை. கடைசி நேரத்தில் மோசா முஸ்தபா மோசா என்பவர் வேட்பாளராக களம் இறங்கினார். இந்த தேர்தலில் 6 கோடி மக்களில் 2.3 கோடி மக்கள் வாக்களித்தனர்.
அதிபர் தேர்தலில் ஓட்டுப்பதிவு மிகவும் குறைவாக இருந்தது. ஓட்டு போடாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று தேர்தல் துறை அறிவித்தும் ஓட்டுப்பதிவு அதிகமாக நடக்கவில்லை.
இந்நிலையில், இன்று காலை முதல் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. இதில் அப்துல் சிசி தொடக்கத்தில் இருந்தே முன்னிலையில் இருந்து வந்தார்.
வாக்கு எண்ணிக்கை நிறைவடையும் நிலையில், பதிவான வாக்குகளில் 92 சதவீதம் வாக்குகள் பெற்று அதிபர் சிசி மீண்டும் நியமனம் செய்யப்பட உள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. #Tamilnews