

மேலூர்:
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் சென்னையில் இன்று ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில் சசிகலா, தினகரனுக்கு எதிராகவும், அ.தி.மு.க. நாளிதழான நமது எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயா டி.வி.யை மீட்பது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதனை கண்டித்து மதுரை மாவட்டம் மேலூரில் இன்று மதியம் தினகரன் ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் திரண்டனர். அவர்கள் முன்னாள் எம்.எல்.ஏ. சாமி அலுவலகத்தில் இருந்து பேரணியாக பஸ் நிலையத்திற்கு சென்றனர்.
அப்போது அவர்கள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோருக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
பஸ் நிலையம் முன்பு சென்ற அவர்கள் அங்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் உருவ பொம்மையை எரித்தனர். அங்கிருந்த போலீசார் அதை தடுக்க முயன்றனர்.
இதையடுத்து போலீசாருக்கும், தினகரன் ஆதரவாளர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தமிழக அரசையும், போலீசாரையும் கண்டித்த அவர்கள் அங்கேயே சாலையில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து போலீசார் கைது செய்வதாக அறிவித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போலீசாருடன் மீண்டும் வாக்குவாதம் செய்தனர். அங்கு லேசான தள்ளு-முள்ளு ஏற்பட்டது. உடனே போலீசார் விரைந்து செயல்பட்டு மறியல் செய்த 100-க்கும் மேற்பட்ட தினகரன் ஆதரவாளர்களை கைது செய்தனர்.
மேலூரில் நடந்த இந்த போராட்டத்தால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.
மேலூரில் தினகரன் ஆதரவாளர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உருவபொம்மையை எரித்தனர்.