

பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 11,400 கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்து விட்டு வெளிநாட்டில் பதுங்கி இருக்கும் நிரவ் மோடி மற்றும் அவரது குடும்பத்தினரை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வரும் அதே நேரத்தில் இந்தியாவில் உள்ள அவரது சொத்துக்களை முடக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
இதில், சி.பி.ஐ., அமலாக்க பிரிவினர், வருமான வரித்துறையினர் என 3 தரப்பினரும் ஈடுபட்டு உள்ளனர். ஏற்கனவே நிரவ் மோடியின் நகை கடை மற்றும் வைர நிறுவனங்களில் இருந்து ரூ.5,714 கோடி முடக்கப்பட்டுள்ளது. அதேபோல் 141 வங்கி கணக்குகளை முடக்கி வைத்துள்ளனர்.
இந்த ‘மெகா மோசடி’ தொடர்பாக நிரவ் மோடி குழுமத்துக்கு சொந்தமான 523 கோடி ரூபாய் மதிப்புடைய 21 சொத்துகளையும், ரூ.85 கோடி மதிப்பிலான 34 ஆயிரம் தங்கம், வைர நகைகளையும் அமலாக்கத்துறையினர் சமீபத்தில் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில், நிரவ் மோடிக்கு சொந்தமான சுமார் 170 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை பொருளாதார அமலாக்கத்துறையினர் இன்று பறிமுதல் செய்தனர்.
அமலாக்கத்துறையினர் நிரவ் மோடி, முகுல் ஜோஸ்கி உள்ளிட்டோர்களுக்கு சொந்தமான சுமார் 7 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை இதுவரை பறிமுதல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #NiravModi #PNBscam #ED