ஆர்.கே.நகர் தேர்தல் நேரலையாக இணையதளத்தில் ஒளிபரப்பு செய்யப்படும்: தேர்தல் ஆணையம்

ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் வாக்குப்பதிவை இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்ய வசதி செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
ஆர்.கே.நகர் தேர்தல் நேரலையாக இணையதளத்தில் ஒளிபரப்பு செய்யப்படும்: தேர்தல் ஆணையம்
Published on

சென்னை:

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை முன்னிட்டு, அந்த தொகுதிக்கு கூடுதலாக துணை ராணுவப்படையை வரவழைக்க வேண்டும் பணப்பட்டுவாடாவை தடுக்க தொகுதி முழுவதும் உள்ள அனைத்து தெருக்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்றும் ஐகோர்ட்டில், தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ரவிச்சந்திரபாபு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜ கோபாலன், ‘ஆர்.கே.நகரில் சட்டசபை தொகுதியில் மொத்தம் 968 தெருக்கள் உள்ளன. இந்த தெருக்கள் முழுவதும் கண்காணிப்பு கேமரா பொருத்துவது என்பது சாத்தியம் இல்லை’ என்று கூறினார். மேலும் அவர் தன் வாதத்தில் கூறியதாவது:-

‘தேர்தல் நடக்கும்போது வாக்குப்பதிவை தேர்தல் இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 15 கம்பெனி துணை ராணுவ படை அமர்த்தப்பட்டுள்ளன 7 சிறப்பு தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தலை நியாயமாக நடத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.

ஆர்.கே.நகர் தேர்தலை ரத்து செய்யும் நோக்கிலேயே இந்த வழக்கை தி.மு.க தொடர்ந்துள்ளது. ஒவ்வொரு வாக்காளர்களையும் ஓட்டுக்காக லஞ்சம் பெறுவதாக தி.மு.க சித்தரிக்கின்றது’

இவ்வாறு அவர் குற்றம் சாட்டி உள்ளார்.

அப்போது தி.மு.க தரப்பு மூத்த வழக்கறிஞர் வில்சன், தேர்தல் ஆணையத்தின் இந்த அறிக்கையை ஏற்க முடியாது. ஏனெனில், ஆர்.கே.நகர் தேர்தல் சிறப்பு பார்வையாளர் விக்ரம் பத்ரா வந்த அன்று ரூ.100 கோடி ரூபாய்க்கு மேல் பணப்பட்டுவாடா நடந்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் அறிக்கையை படித்து பதிலளிக்க அவகாசம் வேண்டும்’ என்று கூறினார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை சிறிது நேரத்துக்கு தள்ளிவைத்தனர்.

பின்னர் இந்த வழக்கை நீதிபதி விசாரணைக்கு எடுத்தார். அப்போது, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நேர்மையாக நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் தாக்கல் செய்துள்ள அறிக்கையை ஏற்றுக்கொள்வதாக கூறினார்.

பின்னர், ‘இந்த இடைத்தேர்தலில் சட்டத்தை மீறி செயல்படுபவர்கள், ஓட்டுக்காக வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்களை கொடுப்பவர்கள் மீது இரும்புக் கரம் கொண்டு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என்று நம்புவதாக நீதிபதி கருத்து தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com