

புதுடெல்லி:
தவறான தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்த மத்திய பிரதேச மந்திரி நரோட்டம் மிஸ்ராவை 3 ஆண்டுகளுக்கு தகுதி நீக்கம் செய்து தேர்தல் கமிஷன் அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளது.
பா.ஜனதா ஆளும் மத்திய பிரதேச மாநிலத்தின் நீர்ப்பாசனத்துறை மந்திரியாக இருந்தவர் நரோட்டம் மிஸ்ரா. முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகானுக்கு மிகவும் நெருக்கமானவரான இவர் தாதியா சட்டமன்ற தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.
இவர் கடந்த 2008-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலுக்காக தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்த தேர்தல் செலவு கணக்கில், தவறான தகவல்களை அளித்ததாக காங்கிரசை சேர்ந்த ராஜேந்திர பாரதி என்பவர் அப்போது தேர்தல் கமிஷனில் புகார் செய்தார். இது தொடர்பாக மிஸ்ராவுக்கு கடந்த 2013-ம் ஆண்டு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியது.
ஆனால் இந்த நோட்டீசை எதிர்த்து நரோட்டம் மிஸ்ரா மத்திய பிரதேச ஐகோர்ட்டை நாடினார். அங்கு அவரது மனு நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டையும் அவர் அணுகினார். ஆனால் அங்கும் அவருக்கு எவ்வித நிவாரணமும் கிடைக்கவில்லை. இறுதியில் அவர் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் தேர்தல் கமிஷன் நேற்று அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி நரோட்டம் மிஸ்ரா, எம்.எல்.ஏ. பதவியில் இருந்து 3 ஆண்டுகளுக்கு தகுதி நீக்கம் செய்யப்பட்டார். மேலும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட தாதியா சட்டமன்ற தொகுதி காலியாக உள்ளது எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நடவடிக்கையை உறுதி செய்த தேர்தல் கமிஷன் செய்தி தொடர்பாளர், நரோட்டம் மிஸ்ராவின் தகுதி நீக்கம் நேற்று முதல் அமலுக்கு வருவதாக தெரிவித்தார்.
தேர்தல் கமிஷனின் இந்த அதிரடி நடவடிக்கையால் மந்திரி நரோட்டம் மிஸ்ரா, அடுத்த ஆண்டு (2018) நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பையும் இழந்துள்ளார்.