

ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் டவுன் நாமக்கல் ரோட்டில் உள்ள ரெயில்வே நிலையம் அருகே பொதுமக்கள் பயன் பாட்டிற்கு ஏதுவாக ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் சுரங்க பாதை அமைக்கப்பட்டது. மழை காலங்களில் அந்த பாதையில் தேங்கும் மழை நீர் வெளியேற வழியில்லாமல் நீண்ட நாட்களாக அங்கேயே தேங்கி நிற்கிறது. மேலும் அந்தப் பகுதியில் வரும் கழிவு நீரும் அங்கு தேங்கி நிற்கிறது.
இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சுரங்கப்பாதை வழியாக பள்ளிக்கு செல்லும் குழந்தைகளும், ரெயில் நிலையம் செல்பவர்களும் கழிவு நீரில் நடந்து செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது.
எனவே இது பற்றி நகராட்சியில் மனு கொடுத்தும் இது வரை நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும், சுரங்கப்பாதை பகுதியில் தேங்கி நிற்கும் கழிவு நீரை அகற்றி பொதுமக்கள் பயன்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் இன்று (சனிக்கிழமை) காலையில் மக்கள் கூட்டமைப்பு சார்பில் அங்கு வாத்து மேய்க்கும் போராட்டம் நடந்தது.
போராட்டத்திற்கு மக்கள் கூட்டமைப்பின் செயலாளர் வக்கீல் நல்வினை விஸ்வராஜ் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் வக்கீல் பாச்சல் சீனிவாசன் முன்னிலை வகித்தார். போராட்டத்தை பா.ம.க. மாவட்ட அமைப்பு செயலாளர் மோகன்ராஜ் தொடங்கி வைத்தார்.
கோல்டன் நற்பணி மன்ற தலைவர் குபேரதாஸ், பா.ம.க.மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பாலு, 26-வது வார்டு தி.மு.க. செயலாளர் சத்தியமூர்த்தி, மாவட்ட வன்னியர் சங்க தலைவர் மாரியப்பன் உள்பட 15-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு தேங்கி நின்ற கழிவு நீரில் வாத்துகளை இறக்கிவிட்டு போராட்டத்தை நடத்தினார்கள். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் நகராட்சியை கண்டித்தும், அமைச்சர் சரோஜா, சுந்தரம் எம்.பி. ஆகியோரை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினார்கள்.
கழிவு நீரில் வாத்து மேய்க்கும் போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் ரெயில்வே நிலையத்தில் நடைப் பயிற்சிக்கு வந்தவர்கள், அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பலரும் போராட்டத்தை வியப்புடன் பார்த்துவிட்டுச் சென்றனர்.
3 மாதமாக சுரங்கப்பாை பகுதியில் மழை தண்ணீர் மற்றும் கழிவு நீர் தேங்கி நிற்பதாகவும், இது குறித்து பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டினர்.