வறண்டு போன வைகை அணை- 5 மாவட்டங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

வைகை அணை வறண்டு வருவதால் தேனி உள்பட 5 மாவட்டங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு அபாயம் உள்ளது.
வறண்டு போன வைகை அணை- 5 மாவட்டங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு அபாயம்
Published on

தேனி:

கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணையின் மூலம் வைகை அணையில் தண்ணீர் தேக்கப்பட்டு மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்ட விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.

வரு‌ஷநாடு மலைப்பகுதியான மூல வைகை ஆற்றுப்பகுதியில் மழை பெய்தாலும் வைகை அணைக்கு நீர் வரத்து இருக்கும். வைகை அணையில் இருந்து மதுரை மாவட்ட குடிநீர் மற்றும் சேடபட்டி கூட்டுக்குடிநீர் திட்டத்துக்காக தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது.

மற்ற மாவட்டங்களுக்கும், குடிநீர் தேவைக்கு பயன்பட்டு வருகிறது. ராமநாதபுரத்தில் ஆர்.எஸ்.மங்கலம் கண்மாயில் தண்ணீர் தேக்கப்பட்டு அங்கிருந்து 40-க்கும் மேற்பட்ட குளங்களுக்கு தண்ணீர் செல்கிறது இதன் மூலம் அந்த மாவட்ட பொதுமக்களின் குடிநீர் தேவையும் பூர்த்தி செய்யப்படுகிறது.

ஆனால் கடந்த சில மாதங்களாகவே மழை ஓய்ந்து விட்டதாலும், பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டதாலும், வைகை அணை நீர் மட்டம் குறைந்து கொண்டே வருகிறது. தற்போது 35.04 அடியாக உள்ளது.

இதனை கொண்டு 3 மாதங்களுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்யலாம். ஆனால் அதன் பின்பு மழை பெய்தால் மட்டுமே வறட்சியை சமாளிக்க முடியும். 6 கன அடி நீரே வருகிறது. குடிநீருக்காக மட்டும் 60 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.

அணையில் 7 அடி வரை வண்டல் மண் படிந்துள்ளதால் குறைந்த அளவே நீர் எடுக்க முடியும். இதனால் 5 மாவட்டத்துக்கும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

பெரியாறு அணையின் நீர் மட்டம் 113.80 அடியாக உள்ளது. 8 கன அடி நீர் வருகிறது. 100 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 32.95 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 58.71 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை. #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com