குடிபோதையில் தகராறு: தொழிலாளி-பெண்ணுக்கு அரிவாள் வெட்டு

குடிபோதையில் தகராறில் தொழிலாளி மற்றும் பெண்ணுக்கு அரிவாளால் வெட்டிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொழிலாளி அரிவாள் வெட்டு
தொழிலாளி அரிவாள் வெட்டு
Published on

பெரியபாளையம்:

திருவள்ளூர் மாவட்டம் திருப்பாலைவனம் பகுதியைச் சேர்ந்தவர் குமார் (வயது33). கூலித்தொழிலாளி.

இவர் தனது மனைவி முனீஸ்வரி (30)யுடன் பெரியபாளையம் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார். பின்னர், பெரியபாளையம் அண்ணா நகரில் உள்ள தனது அத்தை மகள் பரமேஸ்வரி வீட்டிற்குச் சென்றார்.

பரமேஸ்வரியின் கணவர் கன்னியப்பன், குமார் இருவரும் மது அருந்தினார்கள். மது போதையில் கன்னியப்பன், பரமேஸ்வரி, குமார் அவரது மனைவி முனீஸ்வரி ஆகியோர் ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது குமார் உணவு சரியில்லை என்று கூறியதாக தெரிகிறது. இதனால் குமாருக்கும் கன்னியப்பனுக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது.

வாக்கு வாதம் முற்றியதால் ஆத்திரம் அடைந்த கன்னியப்பன் குமாரை சரமாரியாக அரிவாளால் வெட்டினார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பரமேஸ்வரி ஓடி வந்து கணவரை தடுக்க முயன்றார்.

இதனால் அவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடைபெற்ற இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த முனீஸ்வரி காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என்று கூக்குரலிட்டார். அருகில் இருந்தவர்கள் ஓடிவந்தனர்.

உடனே கன்னியப்பன் தப்பிச் சென்று விட்டார். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த குமார் மற்றும் பரமேஸ்வரியை அருகில் இருந்தவர்கள் மீட்டு பெரியபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பின்னர், மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பெரியபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com