பூந்தமல்லியில் வரி செலுத்தாத வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

பூந்தமல்லியில் கடந்த சில ஆண்டுகளாக சொத்துவரி, குடிநீர் வரி செலுத்தாத வீட்டின் குடிநீர் இணைப்பை நகராட்சி பணியாளர்கள் துண்டித்தனர்.
பூந்தமல்லியில் வரி செலுத்தாத வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு
Published on

பூந்தமல்லி:

பூந்தமல்லி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சொத்து வரி, குடிநீர் வரி, நகராட்சி கடைகளின் வாடகை, குத்தகை உள்ளிட்ட வரிகளை வசூலிப்பதில் நகராட்சி நிர்வாகம் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

நகராட்சி ஆணையர் டிட்டோ உத்தரவின் பேரில் நகராட்சி வருவாய் ஆய்வாளர் சிவக்குமார் தலைமையில் நகராட்சி பணியாளர்கள் தீவிர வரி வசூலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பூந்தமல்லி திருமால்நகர் பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக சொத்துவரி, குடிநீர் வரி செலுத்தாத ஒரு வீட்டின் குடிநீர் இணைப்பை துண்டித்தனர்.

மேலும் வீட்டின் அருகில் தேங்கியுள்ள கழிவு நீரை அகற்றவும் வீட்டின் உரிமையாளருக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

இதேபோல கீழ்மாநகர், மாரியம்மன் கோவில் தெரு, டிரங்க் சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் குடிநீர் வரி செலுத்தாத 9 வீடுகளின் தண்ணீர் இணைப்பை துண்டித்தனர்.

மேலும் நகராட்சி குடிநீர் குழாயில் மோட்டார் வைத்து தண்ணீர் எடுத்த ஒரு மோட்டாரையும் பறிமுதல் செய்தனர். இந்த நடவடிக்கையின் போது நகராட்சி வருவாய் உதவியாளர்கள் ரவி, வரலட்சுமி, பைப் பிட்டர் பாலமுருகன் மற்றும் வருவாய், பொறியியல் துறை பணியாளர்கள் உடன் இருந்தனர்.

மேலும் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அனைத்து வித வரிகளையும் பொதுமக்கள் விரைவில் செலுத்த வேண்டும் என்றும், வரி செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com