தஞ்சை அருகே குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தஞ்சை அருகே குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
Published on

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டத்தில் சில பகுதிகளில் குடிநீர் பிரச்சினை தீராத தொடராக நீண்டு கொண்டே செல்கிறது. தண்ணீர் கேட்டு பொதுமக்களும் போராடி வருகின்றனர். இருந்த போதிலும் அதற்கான தீர்வு கிடைக்கவில்லை.

இந்த நிலையில் தஞ்சை சூரக்கோட்டை ஆதிதிராவிடர் தெரு பகுதியில் சுமார் 200 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் 2 மேல் நிலை நீர்த்தேக்க தொட்டிகள் உள்ளது. இதில் இருந்து தான் இந்த பகுதிக்கு குடிநீர் சென்றது.

இதைத் தொடர்ந்து கடந்த சில வாரங்களாக நீர்தேக்க தொட்டியில் உள்ள தண்ணீர் முற்றிலுமாக குறைந்து விட்டது. இதனால் இப்பகுதிக்கு குடிநீர் தட்டுபாடு நிலவியது. அன்றாட தேவைக்கு கூட தண்ணீர் இல்லாமல் இப்பகுதி மக்கள் சிரமத்திற்கு உள்ளானார்கள்.

இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் சென்று மனு அளித்தனர். அப்போது அவர்கள் விரைவில் தண்ணீர் வருவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்றனர். ஆனால் இன்று வரை அதற்கான எந்த நடவடிக்கைகளிலும் அதிகாரிகள் ஈடுபடவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த இப்பகுதி மக்கள் இன்று காலை தஞ்சை - பட்டுக்கோட்டை சாலையில் காலிகுடங்களுடன் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது குறித்து தஞ்சை தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசாரும், அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். தொடர்ந்து தண்ணீர் வருவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று கூறியதன் பேரில் பொதுமக்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

பொதுமக்கள் சாலை மறியல் செய்ததால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com