ஓசூர் அருகே குடிநீர்வேண்டி கைக்குழந்தையுடன் பெண்கள் சாலை மறியல்

ஓசூர் அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதில் சில பெண்கள் தங்கள் கைக்குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்.
ஓசூர் அருகே குடிநீர்வேண்டி கைக்குழந்தையுடன் பெண்கள் சாலை மறியல்
Published on

ஓசூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஒன்றியம் நல்லூர் ஊராட்சிக்குட்பட்டது சித்தனபள்ளி கிராமம். இங்கு 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த நிலையில், இங்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டு, கடந்த 3 மாதங்களுக்கு மேலாக கடும் அவதிப்பட்டு வருவதாக கிராம மக்கள் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் இது சம்பந்தமாக ஊராட்சி செயலர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் கூறியும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இப்பகுதியில் போர்வெல் பழுதாகி விட்டது. விரைவில் சரி செய்கிறோம் என்றுகூறி காலம் தாழ்த்தி வருவதாகவும், இதனால் தண்ணீரை பணம் கொடுத்து வாங்கி பயன்படுத்தும் நிலைக்கு ஆளாகியுள்ளதாகவும் கிராம மக்கள் கவலையுடன் தெரிவித்தனர். நீண்ட நாட்களாகியும், குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படாததை அடுத்து, ஆவேசம் அடைந்த சித்தனபள்ளி கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் இன்று காலை திடீரென அப்பகுதியில் திரண்டனர்.

பின்னர், சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதில் சில பெண்கள் தங்கள் கைக்குழந்தைகளுடன் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து ஓசூர் அட்கோ போலீசார் அங்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். 

அதன்படி, மாற்று ஏற்படாக கிராம மக்களுக்கு டிராக்டர் மூலம் தண்ணீர் விநியோகிக்கப்படும் என்றும், போர்வெல் பழுது நீக்கி, இன்னும் சில நாட்களில் சீரான குடிநீர் விநியோகம்செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து, மறியலை கைவிட்டு, கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

மறியல் காரணமாக அப்பகுதியில், சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com