கிருஷ்ணகிரி - தருமபுரியில் குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல்

கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரியில் இன்று காலை குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி - தருமபுரியில் குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல்
Published on

ராயக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் ஒன்றியம் நாகமங்கலம் ஊராட்சி நீலகிரி கிராமத்தில் சுமார் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த 1 வாரமாக குடிநீர் வரவில்லை. இதனால் குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் தவித்து வந்தனர். இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் இன்று காலை காலி குடங்களுடன் ராயக்கோட்டை- கெலமங்கலம் சாலை நாகமங்கலம் பஸ் நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். 

இது குறித்து தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் உமா மகேஸ்வரி, உத்தனப்பள்ளி சப்-இன்ஸ்பெக்டர் மஞ்சு நாதன், ஊராட்சி செயலாளர் சையத் பாஷா ஆகியோர் வந்தனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி குடிநீர் வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். பின்னர் சாலைமறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே பாகல்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பட்டகப்பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 200 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர். இங்கு வசிப்பவர்களுக்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் நகராட்சி சார்பில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டது. சில நேரங்களில் பஞ்சாயத்து சார்பில் நிலத்தடி நீர் விநியோகம் செய்யப்பட்டது.

கடந்த ஒரு மாதமாக சரிவர தண்ணீர் விநியோகம் செய்யவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் அப்பகுதியைச் சேர்ந்தவர் கள் பலமுறை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை.  இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் பட்டகப்பட்டிக்கு திரண்டு வந்து இன்று காலை சாலை  மறியலில் ஈடுபட்டனர். 

இதுகுறித்து தகவலறிந்த ஊராட்சி செயலர் திருவருட்செல்வன் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். சீராக குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com