கிணத்துக்கடவு அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

கிணத்துக்கடவு அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.
கிணத்துக்கடவு அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
Published on

கிணத்துக்கடவு:

கிணத்துக்கடவு அருகே உள்ள தேவராயபுரம் ஊராட்சி சென்றாம் பாளையம் கிராமத்தில் கடந்த 18 நாட்களாக குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் இன்று காலை 7.30 மணியளவில் சென்றாம் பாளையம் பஸ் நிறுத்தத்தில் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.

இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது அந்த வழியாக பொள்ளாச்சியில் இருந்து கிணத்துக்கடவு செல்லும் அரசு பஸ் வந்தது. அதனை பொதுமக்கள் சிறை பிடித்தனர். இது குறித்து தகவல் கிடைத்ததும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயக்குமார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மோகன் தாஸ், அம்பராம் பாளையம் கூட்டு குடிநீர் திட்ட உதவி பொறியாளர் திருமலை சாமி, கிணத்துக்கடவு சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ஆகியோர் விரைந்து வந்தனர்.

அவர்கள் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் தான் தண்ணீர் சப்ளை செய்ய முடியவில்லை.

இன்று முதல் முறையாக தண்ணீர் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி இன்று தண்ணீர் வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியல் காரணமாக 45 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com