குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு

குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
Published on

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள கோட்டியால் கிராமம் வடக்கு தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அவர்களின் குடிநீர் தேவைக்காக அப்பகுதியில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு, அதன்மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆழ்குழாய் கிணற்றில் மண் சரிவு ஏற்பட்டு தூர்ந்து போனது. இதனால் குடிநீர் இன்றி அப்பகுதி பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். 

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் நேற்று குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் தா.பழூர்- சுத்தமல்லி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தா.பழூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஞ்சனா, தா.பழூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பஞ்சாபிகேசன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ஜாகிர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள் கூறுகையில், இதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தட்டுப்பாடு இன்றி குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் தா.பழூர்- சுத்தமல்லி சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

X

Maalai Malar
www.maalaimalar.com