குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

பென்னாகரம் அருகே குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
Published on

பென்னாகரம்:

தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தை அடுத்த கெண்டைய அள்ளி ஊராட்சிக்குப்பட்ட காவக்காடு கிராமத்தில் சுமார் 300 குடியிருப்புகள் உள்ளனர். இந்த பகுதியில் ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட  பொதுமக்கள் வசித்து வருகின்றனர். கடந்த 1 மாதமாக இந்த பகுதிக்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வரவில்லை. இதனால் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமம் அடைந்து அவதிப்பட்டு வந்தனர். மேலும் தேவைக்கு அருகில் உள்ள கிராமத்தில் இருந்து குடிநீர் எடுத்து வந்து பயன்படுத்தி வந்தனர்.

இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள் முறையாக குடிநீர் வழங்ககோரி பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பல முறை மனு கொடுத்தனர். ஆனால் இது வரைக்கும் குடிநீர் கிடைக்க எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் பெண்கள் காலி குடங்களுடன் இன்று காலை 9 மணிக்கு ஒன்று திரண்டு பென்னாகரம்-மேச்சேரி சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த பெரும்பாலை போலீசாரும், பென்னாகரம் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜ்குமார், பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலர் விமலன், கிராமநிர்வாக அலுவலர் சுகுமார், ஆர்.ஐ. மாலா ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

அப்போது  அதிகாரிகள் குடிநீர் கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதன் பின்னர் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com