மதுபோதையில் தகராறு: தஞ்சையில் ரவுடி வெட்டிக்கொலை

தஞ்சையில் மதுபோதை தகராறில் ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொலை
கொலை
Published on

தஞ்சாவூர்:

தஞ்சை கீழவாசல் திரவுபதி அம்மன் கோவிலை சேர்ந்தவர் நாராயணசாமி. இவரது மகன் அருண் (வயது 37). பிரபல ரவுடியான இவர் மீது போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் நேற்று தமிழகத்தில் 43 நாட்களுக்கு பிறகு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது.

நேற்று மாலை அருண் அவரது நண்பர்கள் 3 பேர் தஞ்சையில் உள்ள ஒரு டாஸ்மாக்கில் மது வாங்கினர். பின்னர் அருண் உள்ளிட்ட 4 பேரும் அதே பகுதியில் உள்ள வீட்டில் இரவில் மது அருந்தி கொண்டிருந்தனர். போதை தலைக்கேறிய நிலையில் காணப்பட்டனர்.

அப்போது அருணுக்கும், அவரது நண்பர்களுக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே இன்று அதிகாலை அந்த இடத்தில் அருண் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த தஞ்சை கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். கொலை நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

இதையடுத்து அருணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருணுடன் மது அருந்திய 3 பேர் இந்த கொலையை செய்தனரா? அல்லது வேறு யாராவது இந்த சம்பவத்தில் ஈடுபட்டனரா? என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே அருணுடன் மது அருந்திய அவரது நண்பர்கள் 3 பேரும் தலைமறைவாகி விட்டனர். போலீசார் அவர்களை தேடி வருகின்றனர். அவர்களை பிடித்து விசாரித்தால் உண்மை நிலவரம் தெரியும் என்று போலீசார் தரப்பில் தெரிவித்தனர். இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com