கூடுதல் வரதட்சணை கேட்டு மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த பேராசிரியர் கைது

கூடுதல் வரதட்சணை கேட்டு மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த பேராசிரியரை போலீசார் கைது செய்தனர்.
கூடுதல் வரதட்சணை கேட்டு மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த பேராசிரியர் கைது
Published on

ராஜபாளையம்:

ராஜபாளையம் சங்கரபாண்டியபுரம் தெருவைச் சேர்ந்தவர் கவுசல்யா (வயது 26). இவருக்கும், ராஜபாளையம் அருகேயுள்ள முகவூரைச் சேர்ந்த காஞ்சித்தலைவன் (33) என்பவருக்கும் கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

திருமணத்தின் போது 40 பவுன் நகை, ரூ. 5 லட்சம் ரொக்கம் மற்றும் சீர்வரிசை பொருட்கள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. காஞ்சித்தலைவன் தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் காஞ்சித்தலைவன், அவரது தாயார் முனியம்மாள், சகோதரி தமிழ்செல்வி ஆகியோர் கவுசல்யாவிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது.

இது குறித்து கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீசில் கவுசல்யா புகார் செய்தார். அதன் பின்னர் தனது தாய் வீட்டுக்கு வந்துவிட்டார்.

போலீசார் சமரசம் செய்த பின்னரும் காஞ்சித் தலைவன் தனது வீட்டுக்கு மனைவியை அழைத்து வரவில்லை.

இந்த நிலையில் காஞ்சித்தலைவன் தனது மனைவியின் வீட்டுக்குச் சென்று கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

இது குறித்து ராஜபாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு ரவிச்சந்திரனிடம் கவுசல்யா புகார் செய்தார். அவரது உத்தரவின் பேரில் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனா விசாரணை நடத்தி பேராசிரியரை கைது செய்தார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெறுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com