

ஊத்துக்கோட்டை:
ஊத்துக்கோட்டை அருகே உள்ள முக்கரம்பாக்கம் கிராமம் மேட்டு காலனியை சேர்ந்தவர் உதயா (வயது 27) கூலித் தொழிலாளி. இவரது மனைவி ரேகா (வயது 20), இவர்களுக்கு 1½ வயதில் மகள் உள்ளார்.
உதயா, ரேகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பின் வரதட்சணை கொண்டு வரச்சொல்லி துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது.
நேற்று தகராறு நடந்ததில் ஆத்திரமடைந்த உதயா தன் மனைவியை அடித்து உதைத்து வெளியே சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த ரேகா வீட்டில் உள்ள மின் விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து ஊத்துக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து ரேகா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.