

சென்னை:
பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கடந்த மாதம் தனியார் பால் கலப்படம் பற்றி பரபரப்பு பேட்டி அளித்தார். அப்போது, தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் தனியார் நிறுவனங்களின் பாலில் ரசாயன பொருட்கள் பெருமளவு கலக்கப்படுவதாக குற்றம் சுமத்தினார்.
பல நாட்கள் பால்கெட்டு போகாமல் இருக்க, தனியார் நிறுவனங்கள் பாலில் ரசாயன பொருட்களை கலப்பதாகவும், இந்த பால் மாதிரியை சேகரித்து ஆய்வு கூடங்களுக்கு அனுப்பியுள்ளதாகவும், அந்த ஆய்வு அறிக்கை கிடைத்ததும், தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியிருந்தார். இந்த கலப்பட பால் விவகாரம் குறித்து அடிக்கடி பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
இந்த நிலையில் 3 தனியார் பால் நிறுவனங்கள், சென்னை ஐகோர்ட்டில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளன. அதில் எந்த ஒரு அறிவியல் ரீதியான ஆதாரங்களும் இல்லாமல் தனியார் நிறுவனங்கள் விற்பனை செய்யும் பாலில் பெருமளவு ரசாயனம் கலக் கப்படுவதாகவும், இதை குடிக்கும் பொதுமக்களுக்கு புற்றுநோய் உள்ளிட்ட பல நோய்கள் வரும் என்றும் அமைச்சர் பேட்டியளித்து வருகிறார்.
ஆனால், எங்கள் நிறுவனம் விற்பனை செய்யும் பாலில் எந்த ஒரு கலப்படமும் இல்லை. சுத்தமான பாலைத் தான் விற்பனை செய்கிறோம். ஆனால் அறிவியல் ரீதியான ஆய்வுகள் எதையும் செய்யாமல் தவறான தகவல்களை அமைச்சர் பரப்புவதால், எங்கள் நிறுவனத்துக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, எங்கள் நிறுவனம் குறித்து தவறான தகவல்களை பரப்ப அமைச்சருக்கு தடை விதிக்க வேண்டும்.
இதுவரை தவறான தகவல்களை பரப்பி, எங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதற்காக தலா ரூ.1 கோடியை (மொத்தம் ரூ.3 கோடி) இழப்பீடாக எங்களுக்கு வழங்க அமைச்சருக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தன.
இந்த மனு நீதிபதி எஸ். கார்த்திகேயன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் தனியார் பால் நிறுவனங்கள் விற்பனை செய்யும் பால் குறித்து அமைச்சர் பேசக்கூடாது என்று நீதிபதி கருத்து தெரிவித்தார்.
பின்னர், இந்த மனுவுக்கு 4 வாரத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்று அமைச்சர் உள்ளிட்டோருக்கு நீதிபதி உத்தர விட்டார்.