

அகர்தலா:
அண்மையில் நடந்த திரிபுரா சட்டசபை தேர்தலில் 25 ஆண்டு கால மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆட்சிக்கு பா.ஜனதா முடிவு கட்டியது. இதையடுத்து முதல்-மந்திரியாக மாநில பா.ஜனதா தலைவரான பிப்லாப்குமார் தேவ் தேர்வு செய்யப்பட்டார். அண்மைக்காலமாக அவர் தெரிவிக்கும் கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் அவர் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், “முந்தைய மார்க்சிஸ்ட் அரசாங்கம் இங்குள்ள இளைஞர்களிடம் சுய தொழில் தொடங்குவதற்குரிய மனநிலையை ஏற்படுத்தவில்லை. அதனால் அவர்கள் அரசாங்க வேலையை எதிர்பார்த்தே இருந்தனர். எனவே மாநில இளைஞர்கள் சுய தொழில் தொடங்க முன்வரவேண்டும். பெரிய கட்டிடங்கள், அலுவலகங்களில் அமர்ந்து வேலை பார்த்தால்தான் சம்பாதிக்க முடியும் என்று அர்த்தம் அல்ல. கால்நடை, கோழி வளர்ப்பு போன்றவற்றிலும் ஈடுபடலாம். இதற்காக ஒவ்வொரு அதிகாரியும் 10 இளைஞர்களுக்கு வழிகாட்டவேண்டும் என்று உத்தரவிட்டு இருக்கிறேன்” என்றார்.
சில நாட்களுக்கு முன்பு அரசாங்க வேலை தேடுவதை கைவிட்டு பீடா கடை வைக்கலாம் என்று நீங்கள் கூறியதாக செய்திகள் வெளியானதே? என்ற கேள்விக்கு பிப்லாப்குமார் தேவ், “இதுபற்றி நான் எதுவும் கூற மாட்டேன். ஏனென்றால் ஊடகங்கள் எனது நண்பர்கள்” என்று மழுப்பலாக பதில் அளித்தார்.