துணைவேந்தர் அறையில் கட்டு கட்டாக ஆவணங்கள் - 9 மணி நேர சோதனையில் சிக்கியது

துணைவேந்தர் கணபதி அறையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் 9 மணி நேரம் நடத்திய சோதனையில் கட்டு கட்டாக ஆவணங்கள் சிக்கியது.
துணைவேந்தர் அறையில் கட்டு கட்டாக ஆவணங்கள் - 9 மணி நேர சோதனையில் சிக்கியது
Published on

கோவை:

கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி, பேராசிரியர் தர்மராஜ் ஆகியோர் கடந்த 3-ந் தேதி ரூ.30 லட்சம் லஞ்சம் வாங்கியபோது கைது செய்யப்பட்டனர்.

அப்போதே லஞ்ச ஒழிப்பு போலீசார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தரின் அறை, அலுவலகம், பேராசிரியர் தர்மராஜின் அறை உள்பட பல இடங்களில் சோதனை நடத்தி இருந்தனர்.

நேற்றுமுன்தினம் 2-வது முறையாக லஞ்ச ஒழிப்பு போலீசார் பல்கலைக்கழகத்தில் திடீரென சோதனை நடத்தினர். ஆனால் அவர்கள் ¾ மணி நேரத்திலேயே திரும்பி விட்டனர்.

இந்நிலையில் நேற்று மாலை 4 மணி அளவில் பல்கலைக்கழகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரிகள் 3-வது முறையாக அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். டி.எஸ்.பி.க்கள் ராஜேஷ், தட்சிணாமூர்த்தி ஆகியோர் தலைமையிலான போலீசார் துணைவேந்தர் கணபதியின் அறையில் இருந்த ஆவணங்களை பார்வையிட்டு ஆதாரங்களை சேகரித்தனர்.

துணைவேந்தர் கணபதி 2016-ம் ஆண்டில் பேராசிரியர் பணி நியமனங்கள் மூலம் ரூ.30 கோடி லஞ்சம் வாங்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவரது அறையில் உள்ள கம்ப்யூட்டர் ‘ஹார்டு டிஸ்க்’கில் இருந்த தகவல்களை பதிவிறக்கம் செய்து கொண்டனர்.

மேலும் துணைவேந்தரின் பதவிகாலத்தில் நியமிக்கப்பட்ட பணிநியமனங்களின் உத்தரவு வழங்கியதற்கான ஆவணங்கள், திட்டப்பணிகளுக்கான ஒப்பந்தம் தொடர் பான ஆவணங்கள், பல்கலைக்கழகங்களில் நடந்த விழாக்களுக்கான செலவு விவரங்கள் தொடர்பான பில்கள் உள்பட கட்டுக்கட்டாக ஆவணங்களை கைப்பற்றினர்.

பணிநியமனத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து பதிவாளர் வனிதாவிடம் விசாரித்தனர். முறைகேடு தொடர்பாக பேராசிரியர்கள், ஊழியர்கள் யாராவது உங்களிடம் புகார் செய்தார்களா? என பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தினர்.

பின்னர் துணைவேந்தர் கணபதியின் நேர்முக உதவியாளர் சுல்தான் பேகம், பதிவாளர் வனிதாவின் உதவியாளர் ராஜன் சங்கர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர்கள் உள்பட 10-க்கும் மேற்பட்டோரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தினர். பணி நியமனங்களில் துணைவேந்தருக்கு உடந்தையாக இருந்தவர்கள் யார்?, துணைவேந்தரை அடிக்கடி சந்தித்து பேசும் அலுவலர்கள் யார்-யார்? என்று விசாரிக்கப்பட்டது.

மாலையில் பல்கலைக்கழக அலுவலக ஊழியர்கள் பணி முடிந்து வெளியேறிய பின்னரும் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் விசாரணை தொடர்ந்தது. நள்ளிரவு 1 மணிக்கு சோதனை முடித்துக் கொண்ட போலீசார் கைப்பற்றிய ஆவணங்களை வாகனத்தில் எடுத்து சென்றனர்.

பல்கலைக்கழகத்தில் 9 மணி நேரம் நடத்திய சோதனையில் ஏராளமான ஆவணங்களை கைப்பற்றி உள்ளோம். இவை இந்த வழக்குக்கு ஆதாரங்களாக சேர்க்கப்படும். ஏற்கனவே துணைவேந்தர் கணபதி, பேராசிரியர் தர்மராஜ், தொலைதூர கல்வி இயக்குனர் மதிவாணன் ஆகியோர் உதவி பேராசிரியர் சுரேசிடம் பேரம் பேசிய ‘ஆடியோ டேப்’ ஆதாரம் உள்ளது. அதனை கோர்ட்டில் ஒப்படைத்துள்ளோம்.

கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் மேலும் சில ஊழியர்கள், அலுவலர்களிடம் விசாரணை நடத்தப்படும். இதில் முறைகேடு கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும்

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com