ஊதிய உயர்வு வழங்கக்கோரி தஞ்சை, நாகை, திருவாரூரில் அரசு டாக்டர்கள் வேலைநிறுத்த போராட்டம்

தஞ்சை, நாகை, திருவாரூரில் ஊதிய உயர்வு வழங்கக்கோரி அரசு டாக்டர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் அவதியடைந்தனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

தஞ்சாவூர்:

காலமுறை ஊதியம், பிற மாநிலங்களுக்கு நிகராக ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பலவேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு மருத்துவமனை டாக்டர்கள் பல ஆண்டுகளாக போராடி வந்தனர். ஆனால் டாக்டர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றபடாததால் தொடர்ந்து காலவரையற்ற உண்ணாவிரதம், மனித சங்கிலி, ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர்.

தற்போது அடுத்த கட்டமாக 24 மணி நேர வேலைநிறுத்த போராட்டம் இன்று தமிழகம் முழுவதும் நடைபெறும் என்று அரசு மருத்துவமனை டாக்டர்கள் சங்கத்தினர் அறிவித்திருந்தனர்.

அதன்படி தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் அரசு டாக்டர்கள் காலையில் வழக்கம்போல் பணிக்கு வந்தனர். ஆனால் அவர்கள் எந்தவித சிகிச்சை மற்றும் நோயாளிகளை கவனிக்காமல் தங்களது பணிகளை புறக்கணித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இதனால் தஞ்சை மாவட்டம் மட்டுமில்லாது திருவாரூர், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த புறநோயாளிகள் 5000-க்கும் மேற்பட்டோர் கடும் அவதியடைந்தனர். வேலைநிறுத்த போராட்டத்தால் அவர்கள் சிகிச்சை பெறாமல் திரும்பி சென்றனர்.

ஏற்கனவே உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளுக்கும் தேவையான சிகிச்சையை டாக்டர்கள் அளிக்கவில்லை. இதனால் அனைத்து நோயாளிகளும் பாதிக்கப்பட்டனர். ஆனால் அவசர கால சிகிச்சை மட்டும் டாக்டர்கள் அளித்தனர். சில டாக்டர்கள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தும் வகையில் கோரிக்கை அட்டையை சட்டையில் அணிந்திருந்தனர்.

இதேப்போல் திருவாரூர், நாகை அரசு மருத்துவமனைகளிலும் பணிபுரியும் டாக்டர்களும் தங்களது பணிகளை புறக்கணித்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். காலை 7.30 மணிக்கு போராட்டத்தை தொடங்கினர். இதனால் சிகிச்சைக்காக வந்த நோயாளிகள் என்ன செய்வதென்று தெரியாமல் நின்றனர். பின்னர் சிகிச்சை பெறாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

நாளை காலை 7.30 மணி வரை வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. டாக்டர்களின் கோரிக்கை பற்றி பேச்சுவார்த்தை நடத்தி அதனை அரசு முடிவுக்கு கொண்டு வர வேண்டும். அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று சிகிச்சைக்காக வந்த நோயாளிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com