

மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுகா அலுவலக சாலையை சேர்ந்தவர் முத்தழகன். இவருடைய மகன் இளஞ்சேரன். இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார். இளஞ்சேரனுக்கும், மன்னார்குடியை அடுத்த சேரன்குளம் கிராமத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கார்த்திகேயனின் மகள் திவ்யா (வயது25) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2½ வயதில் ஆண் குழந்தை உள்ளது.
இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு திவ்யா, வீட்டில் படுக்கை அறையில் மயங்கி கிடந்தார். இதனையடுத்து திவ்யாவின், கணவர் இளஞ்சேரனின் உறவினர்கள் அவரை மீட்டு மன்னார்குடி அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு திவ்யாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். திவ்யாவின் தலை மற்றும் உடலில் சிறு காயங்கள் இருந்தது.
இதுகுறித்து திவ்யாவின் அண்ணன் பிரேம்குமார், மன்னார்குடி போலீசில் புகார் செய்தார். அதில் தனது தங்கை திவ்யாவை அவரது கணவரின் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி கொலை செய்துவிட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க
வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதை தொடர்ந்து மர்ம சாவு என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இறந்த திவ்யாவுக்கு திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் மன்னார்குடி உதவி கலெக்டர் செல்வசுரபி மேல் விசாரணை நடத்தினார்.
இதையடுத்து திவ்யாவின் கணவர் இளஞ்சேரன், மாமனார் முத்தழகன், மாமியார் ராணி ஆகியோர் மீது வரதட்சணை கேட்டு கொடுமை படுத்துதல் (498 ஏ), கொலைக்கு காரணமாக இருத்தல் (304 பி) ஆகிய 2 பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்த மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன் 3 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தினார்.
இதையடுத்து 3 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் சிறையில் உள்ள 3 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிப்பதற்காக போலீஸ் தரப்பில் மன்னார்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதன் பேரில் இளஞ்சேரன், முத்தழகன், ராணி ஆகியோர் மன்னார்குடி கோர்ட்டில் நீதிபதி விஜயன் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது இளஞ்சேரன், முத்தழகன், ராணி ஆகியோருக்கு 2 நாள் போலீஸ் காவல் அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து சிறையில் உள்ள 3 பேரையும் 2 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மாமனார் முத்தழகன் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
திவ்யா என்னை மதிக்காமல் எதிர்த்து பேசிவந்ததால் அவர் மேல் நான் கோபமாக இருந்தேன். மேலும் மகன் மருத்துவமனை கட்ட பணம் தேவைபட்டதால் திவ்யாவை கொலை செய்து விட்டு அவனுக்கு வேறு திருமணம் செய்தால் பணம் கிடைக்கும் என்று திவ்யாவை கொலை செய்ய திட்ட மிட்டேன்.
இந்த திட்டத்தை எனது மனைவி ராணியிடமும் தெரிவித்தேன். அதற்கு ராணியும் சம்மதம் தெரிவித்தார். திவ்யாவை கொலை செய்வதற்காக ராணியின் தம்பி சிவக்குமார், அவரது நண்பர் கரூரை சேர்ந்த செந்தில் ஆகியோரை கடந்த 17-ந் தேதி மன்னார்குடிக்கு வரவழைத்தோம். அப்போது வீட்டில் இருந்த திவ்யாவை, செந்தில் கீழே தள்ளி விட்டார். இதையடுத்து நானும், சிவக்குமாரும் சேர்த்து திவ்யாவை தலை யணையால் அமுக்கி கொலை செய்துவிட்டு உடலை படுக்கையில் போட்டோம். பின்னர் திவ்யாவை யாரோ கொலை செய்தது போல் நாடகம் ஆடினோம்.
இவ்வாறு அவர் வாக்கு மூலத்தில் கூறியுள்ளார்.
இந்த வழக்கை போலீசார் கொலை வழக்காக மாற்றி மாமனார் முத்தழகன், மாமியார் ராணி, கணவர் இளஞ்சேரன், ராணியின் தம்பி சிவக்குமார் மற்றும் சிவக்குமாரின் நணபர் செந்தில் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே
முத்தழகன், ராணி, இளஞ்சேரன் ஆகியோர் கைது
செய்யப்பட்டு காவலில்
உள்ளனர்.
ஆகவே இக்கொலை வழக்கில் தொடர்புடைய குத்தாலத்தை சேர்ந்த சிவக்குமார், அவரின் நண்பர் கரூரை சேர்ந்த செந்தில் ஆகிய 2 பேரையும் மன்னார்குடி போலீசார் இன்று கைது செய்தனர். இதில் சிவக்குமார் திருவாரூர் குடிமைபொருள் வழங்கல் குற்றபுலனாய்வு பிரிவு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.