ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையை தொடங்கியது ஆணையம்: டாக்டர் சரவணன் ஆஜராகி விளக்கம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் இன்று விசாரணையை தொடங்கியது. முதலில் தி.மு.க. பிரமுகர் சரவணன் ஆவணங்களுடன் விசாரணைக்கு ஆஜரானார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையை தொடங்கியது ஆணையம்: டாக்டர் சரவணன் ஆஜராகி விளக்கம்
Published on

சென்னை:

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. ஜெயலலிதா மரணம் குறித்து ஏதாவது தகவல் இருந்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் அதுகுறித்த விவரத்தை பிரமாண பத்திரமாகவோ அல்லது புகார் மனுவாகவோ ஆணையத்தில் தாக்கல் செய்யலாம் என்று ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.

அதன்படி தி.மு.க. மருத்துவர் அணி துணைத்தலைவரும், திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளருமான டாக்டர் சரவணன், அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஆனூர் ஜெகதீசன், ஜெ.தீபாவின் கணவர் மாதவன் உள்பட 70 பேர் நேரடியாகவும், தபால் மூலமாகவும் பிரமாண பத்திரத்தை ஆணையத்துக்கு அளித்துள்ளனர்.

பிரமாண பத்திரம், புகார் மனுக்கள் அளித்தவர்களிடம் இன்று முதல் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்துவார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பான ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் இன்று விசாரணை தொடங்கியது.

தி.மு.க. மருத்துவர் அணி துணை தலைவர் சரவணன் இன்று ஆணையத்தில் நேரில் ஆஜரானார். அப்போது அவர் கூடுதல் ஆவணங்களை கொண்டு வந்திருந்தார்.

அவரிடம் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணையை தொடங்கினார். நீதிபதி கேட்கும் கேள்விகளுக்கு சரவணன் உரிய பதில்களை அளித்து வருகிறார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், பிரமாண பத்திரம், புகார் மனு ஆகியவற்றை அளிக்க இன்று (22-ம் தேதி) கடைசி நாள். இன்று மாலை 6 மணிக்குள் பிரமாண பத்திரம், புகார் மனுக்களை அளிக்கவேண்டும் என்று ஆணையம் ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com