இலங்கையில் 4 ஆயிரம் பெண்களுக்கு கட்டாய கருத்தடை ஆபரேஷன் செய்த டாக்டர் கைது

இலங்கையில் சிசேரியன் முறை மூலம் பிரவசம் பார்த்தபோது 4 ஆயிரம் பெண்களுக்கு கட்டாய கருத்தடை ஆபரேஷன் செய்த டாக்டர் சியாபுதீன் முஹம்மது சபி-யை போலீசார் கைது செய்தனர்.
இலங்கையில் 4 ஆயிரம் பெண்களுக்கு கட்டாய கருத்தடை ஆபரேஷன் செய்த டாக்டர் கைது
Published on

கொழும்பு:

இலங்கையில் திரிகோணமலை நெடுஞ்சாலையில் கருணாகல் பயிற்சி மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சைக்காக வரும் பெண்களுக்கு சிசேரியன் முறை மூலம் பிரவசம் பார்த்தபோது 4 ஆயிரம் பெண்களுக்கு கட்டாயப்படுத்தி கருத்தடை ஆபரேஷன் செய்த டாக்டர் சியாபுதீன் முஹம்மது சபி என்பவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

குறிப்பாக, அரபு நாட்டு செல்வந்தர்களின் கைக்கூலியாக செயல்பட்ட  டாக்டர் சியாபுதீன் முஹம்மது சபி இந்து மற்றும் புத்த மதங்களை சேர்ந்த பெண்களுக்கு அடுத்த வாரிசு பிறக்காமல் இருப்பதற்காக சிசேரியன் பிரசவம் முடிந்து மயக்கநிலையில் இருந்த பெண்களுக்கு தெரியாமல் இப்படி அவர்  கட்டாய கருத்தடை ஆபரேஷன் செய்ததாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது.

இதற்காக  அரபு நாட்டு செல்வந்தர்கள் அளித்த கைக்கூலி தொகையின் மூலம் சுமார் 40 கோடி ரூபாய் அளவுக்கு டாக்டர் சியாபுதீன் முஹம்மது சபிக்கு சொத்துக்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து கடந்த 24-ம் தேதி டாக்டர் சியாபுதீன் முஹம்மது சபி-யை போலீசார் கைது செய்தனர். தற்போது இந்த வழக்கை சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர். அவரால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிப்பதற்காக கருணாகல் பயிற்சி மருத்துவமனை வளாகத்தில் தனியாக தற்காலிக அலுவலகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த மூன்று நாட்களில் சுமார் 150 பெண்கள் டாக்டர் சியாபுதீன் முஹம்மது சபி மீது புகார் அளித்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட டாக்டர் சியாபுதீன் முஹம்மது சபியிடம் சி.ஐ.டி. போலீசார் தொடர்ந்து விசாரித்து வரும் நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த சிறப்பு விசாரணை குழுவை அமைத்து இலங்கை சுகாதாரத்துறை மந்திரி ரஜிதா சேனரத்னே உத்தரவிட்டுள்ளார்.

சிலோன் மகப்பேறு மருத்துவக் கல்லூரியை சேர்ந்த மூன்று உறுப்பினர்களும் இலங்கை மருத்துவ கவுன்சிலை சேர்ந்த ஒரு உயரதிகாரியும் இந்த சிறப்பு விசாரணை குழுவில் இடம்பெற்றுள்ளனர். புகார் அளிக்கும் பெண்களுக்கு முறையான மருத்துவ பரிசோதனைகளை செய்து இந்த குழுவினர் அரசிடம் அறிக்கை சமர்ப்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், இந்த விவகாரம் தொடர்பாக நேற்று முன்தினம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுகாதாரத்துறை மந்திரி ரஜிதா சேனரத்னே, ‘ஒரேயொரு டாக்டரால் இதை செய்ய சாத்தியமில்லை’ என்று குறிப்பிட்டிருந்தார்.

ஒரு பெண்ணுக்கு சிசேரியன் ஆபரேஷன் நடக்கும்போது தலைமை அறுவை சிகிச்சை நிபுணருடன் மூன்று துணை மருத்துவர்களும் மயக்க மருந்து கொடுக்கும் நிபுணரும் பல நர்சுகளும் ஆயாமார்கள் என்றழைக்கப்படும் எடுபிடி வேலையாட்களும் உடன் இருப்பார்கள்.

இவர்களுக்கு எல்லாம் தெரியாமல் ஒரேயொரு டாக்டரால் இதை செய்ய சாத்தியமில்லை. எனவே, இதுதொடர்பாக விசாரிக்க தேர்ந்த நிபுணர்களை கொண்ட ஒரு குழுவை அமைக்க வேண்டியுள்ளது. 

இந்த விசாரணையில் டாக்டர் சியாபுதீன் முஹம்மது சபி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் நமது நாட்டு சட்டங்களின்படி அவருக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும் என ரஜிதா சேனரத்னே தெரிவித்திருந்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com