

பொள்ளாச்சி:
பொள்ளாச்சி கோட்டூர் ரோடு சூளேஸ்வரன்பட்டியில் நேற்று முன்தினம் இரவு ஒரு ஜீப் வேகமாக வந்தது. மேலும் தாறுமாறாக ஓடிய ஜீப் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் லேசான காயமடைந்தனர். மேலும் மோட்டார் சைக்கிளும் சேதமடைந்தன. இதை பார்த்த பொதுமக்கள் ஜீப்பை நிறுத்தினர்.
ஆனால் ஜீப்பை ஓட்டி வந்த நபர் நிற்காமல் வேகமாக சென்றதாக தெரிகிறது. இதையடுத்து பொதுமக்கள் மோட்டார் சைக்கிள்களில் அந்த ஜீப்பை விரட்டி சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த பொள்ளாச்சி கிழக்கு போலீசாரும் விரைந்து வந்தனர். நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் வைத்து பொதுமக்கள் ஜீப்பை மடக்கி பிடித்தனர். பின்னர் ஜீப்பில் இருந்தவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், அவரை தாக்க முயன்றனர். ஆனால் அதற்குள் அங்கு போலீசார், வந்து விட்டனர். இதையடுத்து போலீசாரிடம் பொதுமக்கள் ஜீப்பையும், அதில் வந்த நபரையும் ஒப்படைத்தனர்.
போலீசார் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் கிணத்துக்கடவு அருகே உள்ள கொண்டேகவுண்டன்பாளையத்தை சேர்ந்த அருள்ராஜ் (வயது 52) என்பதும், டாக்டரான இவர் பொள்ளாச்சியில் ஆஸ்பத்திரி வைத்து நடத்தி வருவதும் தெரியவந்தது. மேலும் அங்கலக்குறிச்சியில் உள்ள உறவினர்கள் வீட்டிற்கு சென்று விட்டு திரும்பி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். அதில் அவர் மதுகுடித்து விட்டு வாகனம் ஓட்டி வந்தது உறுதியானது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் வைரம், சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் பெருமாள் ஆகியோர் டாக்டர் மீது வழக்குபதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை போலீசார் ஜாமீனில் விடுவித்தனர். மேலும் அவர் ஓட்டி வந்த ஜீப்பையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் பொள்ளாச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.