பொதுமக்கள் எதிர்ப்பை மீறி டாஸ்மாக் கடைகளை திறக்க கூடாது: அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

பொதுமக்களின் எதிர்ப்பை மீறி டாஸ்மாக் கடைகளை திறக்க அரசு முயற்சிக்கக்கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பொதுமக்கள் எதிர்ப்பை மீறி டாஸ்மாக் கடைகளை திறக்க கூடாது: அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
Published on

சென்னை:

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் டாஸ்மாக் மதுபானக் கடை திறக்கக்கூடாது என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதேபோல, கோவை, சேலம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில், டாஸ்மாக் மதுபானக் கடைகளை திறக்க கூடாது என்று ஜெயகுமார், பிரபாகரன் உட்பட 9 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்கள் எல்லாம் நீதிபதிகள் ஆர்.மகாதேவன், எம்.கோவிந்தராஜ் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கடைகள் எங்கெல்லாம் திறக்கப்படுகிறது? அதற்கு எதிர்ப்பு உள்ளதா? என்பது குறித்து டாஸ்மாக் நிறுவனம், மாவட்ட நிர்வாகம் ஆகியோரிடம் இருந்து பதில் வரவில்லை என்று கூடுதல் அட்வகேட் ஜெனரல் வெங்கட்ரமணி கூறினார்.

இதையடுத்து நீதிபதிகள், ‘ஏற்கனவே பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் பகுதிகளில் மதுபானக்கடைகளை திறக்கக்கூடாது என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

அதன் பின்னரும், வலுக்கட்டாயமாக கடைகளை திறக்க அரசு ஏன் முயற்சிக்கிறது? என்று கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு கூடுதல் அட்வகேட் ஜெனரல், ‘சுப்ரீம் கோர்ட்டு விதித்துள்ள விதிமுறைகளை பின்பற்றித் தான், மதுபானக் கடைகளை திறக்கப்படுகின்றன. இதில் எந்த விதிமீறலும் இல்லை’ என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், ‘தங்கள் பகுதியில் டாஸ்மாக் மதுபானக் கடை திறக்கக் கூடாது என்று பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து, அரசுக்கு மனு கொடுத்தால், அந்த மனுவை ஒரு வாரத்துக்குள் பரிசீலித்து தகுந்த முடிவினை மாவட்ட கலெக்டர்கள் எடுக்கவேண்டும். பொதுமக்களின் எதிர்ப்பை மீறி கடைகளை திறக்க அரசு முயற்சிக்கக்கூடாது’ என்று உத்தரவிட்டார்கள். பின்னர் விசாரணையை ஜூன் மாதத்துக்கு தள்ளி வைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com