வீட்டு வேலைக்காக வெளிநாடுகளுக்கு செல்லாதீர்கள்: பாதிக்கப்பட்ட பெண்கள் கதறல்

ரூ.5 ஆயிரம் என்றாலும் சொந்த ஊரில் சம்பாதியுங்கள் என்றும், பணத்துக்கு ஆசைப்பட்டு வீட்டு வேலைக்காக வெளிநாடுகளுக்கு செல்லாதீர்கள் என்றும் பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்தனர்.
வீட்டு வேலைக்காக வெளிநாடுகளுக்கு செல்லாதீர்கள்
வீட்டு வேலைக்காக வெளிநாடுகளுக்கு செல்லாதீர்கள்
Published on

சென்னை :

தமிழகம் உள்ளிட்ட இந்திய மாநிலங்களில் இருந்து வீட்டு வேலைக்காக பலர் வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். அவர்களில் பலர் அங்கிருந்து திரும்பி வருவதற்கு வழி தெரியாமல் சிக்கித்தவிப்பதாக பல்வேறு செய்திகள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன.

அந்தவகையில் வெளிநாடுகளுக்கு சென்று பல இன்னல்களுக்கு ஆளாகி தமிழ்நாட்டுக்கு திரும்பியவர்கள் சென்னையில் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது குவைத்தில் இருந்து வந்த மதுரையை சேர்ந்த ராஜலட்சுமி கூறியதாவது:-

குடும்ப சூழலுக்காக வீட்டு வேலை செய்ய வெளிநாட்டுக்கு செல்ல முடிவு செய்தேன். என்னுடைய கணவர் உள்பட குடும்ப உறுப்பினர்கள் யாரும் இதற்கு சம்மதிக்கவில்லை. ஆனால் ரூ.45 ஆயிரம் சம்பளம் என்றதும் ஆசைப்பட்டு சென்றுவிட்டேன். அங்கு சென்ற பிறகுதான் கொடுமை நடப்பதை தெரிந்து கொண்டேன்.

காலை எழுந்ததில் இருந்து நள்ளிரவு வரை வேலை வாங்கி கொடுமைப்படுத்தினார்கள். மனதளவிலும், உடல் அளவிலும் பாதிக்கப்பட்டேன். சொந்த ஊருக்கு திரும்பிவிடலாம் என்று நினைத்தால், அவ்வளவு எளிதாக போய்விடுவியா? இதற்காகவா இவ்வளவு செலவு செய்து அழைத்து வந்தோம்? என்று ஏஜெண்டுகள் தரப்பில் மிரட்டுகிறார்கள்.

சுமார் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் கொடுத்த பிறகுதான் என்னை அங்கிருந்து திருப்பி அனுப்பினார்கள். என்னைப்போல் தமிழ் பெண்கள் பலரும் அங்கு சித்ரவதைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். தயவு செய்து, வீட்டு வேலைக்காக வெளிநாடுகளுக்கு செல்லாதீர்கள். ரூ.5 ஆயிரம் என்றாலும் சொந்த ஊரில் சம்பாதியுங்கள்.

இவ்வாறு அவர் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

இதேபோன்ற கருத்துகளைத்தான் பாதிக்கப்பட்ட மற்ற பெண்களும் முன்வைத்தனர்.

இதுகுறித்து தேசிய வீட்டு வேலைத் தொழிலாளர் இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வளர்மதி கூறியதாவது:-

போதிய விழிப்புணர்வு இல்லாததால் பல பெண்கள் இதுபோல் வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கிறார்கள். அப்படி வேலைக்கு செல்பவர்களுக்கு பாதுகாப்பாக எப்படி போகவேண்டும்? என்பது குறித்து முன்தயாரிப்பு பயிற்சி அளிக்க வேண்டும். மாநில அரசு புலம்பெயர் தொழிலாளர்களுக்கு என்று தனி அமைச்சகம் உருவாக்க வேண்டும். அதேபோல் தேசிய அளவில் புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்புக்கான சட்டங்களை இயற்றவேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com