

புதுடெல்லி:
இளம் பெண்களை கற்பழித்த வழக்கில் அரியானாவை சேர்ந்த சாமியார் குர்மீத் ராம் ரகீம் சிங் குற்றவாளி என சி.பி.ஐ. கோர்ட் கடந்த 25-ம் தேதி தீர்ப்பளித்தது. அவருக்கான சிறை தண்டனை தொடர்பாக இன்று தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
சாமியார் குர்மீத் சிங் தண்டிக்கப்பட்டதை தொடர்ந்து அரியானா, பஞ்சாப், டெல்லி ஆகிய பகுதிகளில் நிகழ்ந்த வன்முறையில் முப்பதுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். சுமார் 200 பேர் காயமடைந்தனர். இன்று தண்டனை விபரம் வெளியாகும்போது அசம்பாவித சம்பவங்கள் நிகழலாம் என அஞ்சப்படுகிறது.
அதனால் அரியானா, பஞ்சாப் மற்றும் டெல்லி மாநிலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரியானாவில் பள்ளிகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டெல்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது.
இந்நிலையில், டெல்லியில் பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் என்பது போன்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று அம்மாநில காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக டெல்லி காவல்துறையின் செய்தி தொடர்பாளர் மதூர் வெர்மா கூறுகையில், “பள்ளிகள் இன்று மூடப்பட்டிக்கும், வழிகள் மாற்றிவிடப்பட்டுள்ளது போன்று சமூக வலைதளங்களில் உலவி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம். யாரும் பீதி அடைய வேண்டாம்.
டெல்லி போலீஸ் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. கூடுதல் படைகள் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளன. மெட்ரோ ரெயில் பாதையில் எந்த மாற்றமும், குறைப்பும் இல்லை. அவை எல்லாம் தவறான செய்திகளே” என்றார்.