கோவையில் முன் விரோதத்தில் வாலிபர் குத்திக்கொலை

கோஷ்டி மோதலில் புவனேஸ்வரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கல்லூரி மாணவர் சந்தோஷ்குமார், சஞ்சய் ஆகியோர் காயம் அடைந்தனர்.
கோவையில் முன் விரோதத்தில் வாலிபர் குத்திக்கொலை
Published on

பீளமேடு,

கோவை ஆர்.ஜி.புதுரை சேர்ந்தவர் புவனேஸ்வரன்(23). இவருக்கும் அதே பகுதியை வாலிபர்கள் சிலருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இரு தரப்பினரும் அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று அந்த கும்பல், புவனே ஸ்வரனிடம் பேச வேண்டும் என கூறி சின்னியம்பாளையத்துக்கு அழைத்துள்ளனர். அதன்படி அவரும் தனது நண்பர்களுடன் அங்கு சென்றார்.

அப்போது அங்கு 6 பேர் நின்றிருந்தனர். அவர்கள் அனைவரும் நின்று பேசி கொண்டிருந்தனர். அப்போது ஒரு வாலிபர் மற்றொரு வாலிபரின் தாயாரை தகாத வார்த்தைகளால் பேசி திட்டி உள்ளார்.

இதனால் அவர்களுக்கிடையே அடிதடி ஏற்பட்டது. மேலும் இது கோஷ்டி மோதலாக மாறி ஒருவரையொருவர் தாக்கி உள்ளனர். வாக்குவாதம் முற்றவே 6 பேர் கும்பல் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து புவனேஸ்வரன் மற்றும் அவரது நண்பர்களை குத்தினர்.

இதில் பலத்த காயம் அடைந்த புவனேஸ்வரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கல்லூரி மாணவர் சந்தோஷ்குமார் (22), சஞ்சய் ஆகியோர் காயம் அடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கல்லூரி மாணவரை குத்தி கொன்றது அதே பகுதியை சேர்ந்த ஜெகத்தரி, சாந்தகுமார், பாலாஜி, தினேஷ், சதீஷ், மாதவன், உள்பட 6 பேர் என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் மாதவன் உள்பட 2 பேர் கைது செய்தனர். தப்பியோடிய மற்ற 4 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள். கோவையில் கோஷ்டி மோதலில் வாலிபர் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com