ஆலங்குளம் அருகே வாலிபர் கொலை- கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படை அமைப்பு

மணிகண்டன் கோர்ட்டில் நேற்று ஆஜராகி விட்டு மோட்டார் சைக்கிளில் ஊருக்கு வந்து கொண்டு இருந்தார். ஆடு திருடும் கும்பலுக்கும், மணிகண்டன் தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
ஆலங்குளம் அருகே வாலிபர் கொலை- கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படை அமைப்பு
Published on

ஆலங்குளம்:

ஆலங்குளம் அருகே உள்ள வடக்கு கிடாரகுளத்தை சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இவரது மகன் மணிகண்டன் (வயது 25), பொக்லைன் எந்திர டிரைவர்.

வெட்டிக்கொலை

இவர் ஒரு வழக்கு தொடர்பாக தென்காசி கோர்ட்டில் நேற்று ஆஜராகி விட்டு மதியம் தனது மோட்டார் சைக்கிளில் ஊருக்கு வந்து கொண்டு இருந்தார். கிடாரகுளம் பாலத்தின் அருகே வந்தபோது, ஒரு மர்ம கும்பல் திடீரென்று மோட்டார் சைக்கிளை வழிமறித்து அரிவாளால் மணிகண்டனை ஓடஓட விரட்டி ெவட்டிக்கொலை செய்தனர். பட்டப்பகலில் நடந்த இந்த கொலை குறித்து தகவல் அறிந்ததும் தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன், இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மணிகண்டன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

முன்விரோதம்

அதில், கடந்த 2021-ம் ஆண்டில் நாச்சியார்புரம் விலக்கு காட்டுப்பகுதியில் கிடாரகுளம் நெட்டூரை சேர்ந்த ஆடு திருடும் கும்பலுக்கும், மணிகண்டன் தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் நெட்டூரை சேர்ந்த ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் குற்றவாளியாக மணிகண்டனும் சேர்க்கப்பட்டார். அந்த முன்விரோதத்தில் கொலை நடந்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையில் 4 தனிப்படை கள் அமைக்கப்பட்டு கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com