

குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் அருகே உள்ள குட்டத்துப்பட்டி பிரிவில் காவிரி கூட்டுக்குடிநீர் நீரேற்று நிலையம் அருகே நேற்று ஒரு வாலிபர் பைக்குடன் எரிந்து கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தார்.
இது குறித்து மாவட்ட எஸ்.பி.சீனிவாசன் உத்தரவின் பேரில், டி.எஸ்.பி. சோமசுந்தரம் தலைமையில் ஒட்டன்சத்திரம் இன்ஸ் பெக்டர் வெங்கடாசலம், சப்இன்ஸ் பெக்டர்கள் கணேசன், மாரிமுத்து ஆகியோர் கொண்ட தனிப்படைகள் அமைக்கப் பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், கொலை செய்யப்பட்டவர் சில்வார் பட்டி ஏ.டி.காலனியைச் சேர்ந்த செல்வராஜ் மகன் கணேசன் (வயது 36) என தெரிய வந்துள்ளது. இவருக்கு திருமணமாகி தனலெட்சுமி என்ற மனைவியும் பிரவீன் (8), சஞ்சனா (5) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். இவர் தப்பாட்ட கலைஞராகவும், வேலை இல்லாத நேரத்தில் கூலி வேலைக்கும் சென்று வந்துள்ளார்.
இவரது தலையில் கல்லைப்போட்டு கொன்று விட்டு பின்னர் அவரை பைக்கில் அமர வைத்து பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர். கொலை யாளிகள் பயன்படுத்திய கல்லில் ரத்தக்கரை படிந்தி ருந்தது. மேலும் நீரேற்று நிலையத்தின் சுவரிலும் ரத்தக்கரை இருந்தது.
எனவே கொலையை 2க்கும் மேற்பட்ட நபர்கள் செய்திருக்க கூடும். அவர் பயன்படுத்திய செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்ட நபர்களின் விபரங்களை சேகரித்து வருகிறோம். அவரது மனைவியிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கள்ளக்காதல் தகராறில் இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.