ஏலச்சீட்டு அலுவலகத்தில் தொழிலாளி தீக்குளிப்பு- எரியும் தீயுடன் பெண் ஊழியரை பிடித்ததால் அவரும் கருகினார்

சுப்பையாவின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. காயத்திரி வடபழனியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஏலச்சீட்டு அலுவலகத்தில் தொழிலாளி தீக்குளிப்பு- எரியும் தீயுடன் பெண் ஊழியரை பிடித்ததால் அவரும் கருகினார்
Published on

போரூர்:

சென்னை, ராமாபுரத்தை சேர்ந்தவர் செல்வம். இவர் எம்.ஜி.ஆர் நகர் அண்ணா மெயின் ரோட்டில் உள்ள முதல் தளத்தில் ரியல் எஸ்டேட் அலுவலகம் நடத்தி வருகிறார். மேலும் அந்த பகுதியில் உள்ள வாடிக்கையாளர்களிடம் பணம் வசூலித்து ஏலசீட்டும் நடத்துகிறார்.

இதில் கெருகம்பாக்கம் பகுதியை சேர்ந்த எலக்ட்ரீசியனான சுப்பையா (வயது56) என்பவர் ரூ.1 லட்சம் சீட்டில் சேர்ந்தார். மாதம் ரூ.3,350 வீதம் 15 மாதங்களாக பணம் கட்டி வந்தார். மொத்தம் 30 மாதங்கள் கட்ட வேண்டும் என்று தெரிகிறது.

இதற்கிடையே சுப்பையாவால் தொடர்ந்து சீட்டு பணம்கட்ட முடியவில்லை. இதனால் அவர் இதுநாள் வரை தான் கட்டிய பணத்தை திருப்பி தருமாறு செல்வத்திடம் கேட்டு வந்தார். ஆனால் அவர் மே மாதம் தான் பணத்தை தரமுடியும் என்று கூறிவிட்டதாக தெரிகிறது.

ஏற்கனவே பண கஷ்டத்தில் தவித்து வந்ததால் விரக்தி அடைந்த சுப்பையா நேற்று இரவு தனது உடல் முழுவதும் பெட்ரோலை ஊற்றி கொண்டு செல்வத்தின் ஏலச்சீட்டு அலுவலகத்துக்கு வந்தார்.

அப்போது உடனடியாக பணத்தை திருப்பி தர வேண்டும். இல்லையென்றால் இங்கேயே தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறி மிரட்டல் விடுத்தார்.

இதை அங்கிருந்தவர்கள் யாரும் கண்டு கொள்ளவில்லை என்று தெரிகிறது.இதனால் மனவேதனை அடைந்த சுப்பையா திடீரென தனது உடலில் தீயை பற்றவைத்தார். இதில் உடல் கருகிய அவர் எரியும் தீயுடன் அங்கிருந்த பெண் ஊழியர் காயத்ரி என்பவரை பிடித்தார். இதில் அவரும் உடல் கருகினார்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் உடல்கருகிய சுப்பையாவை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். காயத்திரி வடபழனியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தகவல் அறிந்ததும் எம்.ஜி.ஆர் நகர் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். சுப்பையாவின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com