சொத்து தகராறில் தொழிலாளி எரித்து கொலை

பெரியகுளம் அருகே சொத்து தகராறில் தொழிலாளி எரித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செந்தில்
செந்தில்
Published on

பெரியகுளம்:

பெரியகுளம் அருகே உள்ள காமாட்சிபுரம் கிராமத்தில் சாலையோரம் உள்ள குப்பைத் தொட்டியில் தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் ஒரு ஆண் பிணம் கிடப்பதாக பெரியகுளம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து டி.எஸ்.பி. முத்துக்குமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். குப்பைத் தொட்டியில் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தவர் தலையில் பலத்த காயமடைந்து உடல் முழுவதும் கம்பி மற்றும் இரும்பு ஆயுதங்களால் தாக்கி கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

கொலை செய்யப்பட்ட பிறகே அவரை குப்பைத் தொட்டியில் போட்டு தீ வைத்து எரிக்கப்பட்டதாக தடயவியல் நிபுணர்கள் சோதனையில் தெரியவந்தது.

போலீஸ் விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் ஏ.காமாட்சிபுரத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான செந்தில் (வயது 50) என தெரிய வந்தது. இவரது தந்தை சிங்காரவேலுக்கு 2 மனைவிகள் உள்ளனர். இதில் முதல் மனைவி ராஜம்மாள் என்பவருக்கு பிறந்தவர்தான் செந்தில் இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை.

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே வீட்டை விட்டு வெளியேறி பல்வேறு ஊர்களில் சாமியார் போல் சுற்றி வந்துள்ளார். தனது பெற்றோர் இறந்து விட்ட நிலையில் 6 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்துள்ளார். 2&வது மனைவியின் குடும்பத்தினரிடம் தனக்குரிய சொத்தை கேட்டுள்ளதாக தெரிகிறது.

இதன் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது முன் விரோதம் காரணமாக இச்சம்பவம் நடந்ததா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com