துடியலூர் அருகே குடிநீர் கேட்டு பெண்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல்

நஞ்சுண்டாபுரம் ஊராட்சியில் பாப்பநாயக்கன்பாளையம் எஸ்.ஆர்.பி நகர் உள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். பொதுமக்கள் இன்று காலை காலி குடங்களுடன் வடமதுரையிலிருந்து ஆனைகட்டி செல்லும் சாலையை மறித்து அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
துடியலூர் அருகே குடிநீர் கேட்டு பெண்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல்
Published on

கவுண்டம்பாளையம்:

கோவை துடியலூர் அடுத்துள்ள நஞ்சுண்டாபுரம் ஊராட்சியில் பாப்பநாயக்கன்பாளையம் எஸ்.ஆர்.பி நகர் உள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக இந்த நகருக்கு தண்ணீர் வரவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதியைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்கள் இன்று காலை காலி குடங்களுடன் வடமதுரையிலிருந்து ஆனைகட்டி செல்லும் சாலையை மறித்து அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்த தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு ஊராட்சி தலைவர் கார்த்திகேசுவரி சுந்தர்ராஜ், துணைத்தலைவர் திருநாவுக்கரசு, செயலாளர் ஈஸ்வரி மற்றும் துடியலூர் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் உள்ளிட்டோர் விரைந்து வந்தனர்.

அவர்கள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தண்ணீர் முறையாக விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதற்கு அதிகாரிகள், உடனடியாக தண்ணீர் வர ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளித்தனர்.

இதனை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் இந்த பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com