கோவை அருகே மகளை விபசாரத்தில் தள்ளிய பெண்: 2-வது கணவருடன் கைது

தாயாரையும், அவரது 2-வது கணவரையும் போலீசார் கைது செய்தனர். விபசாரத்தில் தள்ளப்பட்ட பெண்ணை போலீசார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
கோவை அருகே மகளை விபசாரத்தில் தள்ளிய பெண்: 2-வது கணவருடன் கைது
Published on

சூலூர் அருகே உள்ள கருமத்தம்பட்டி கிருஷ்ணாபுரம் பகுதியில் ஒரு வீட்டை ஒரு குடும்பத்தினர் வாடகைக்கு எடுத்து இருந்தனர். எப்போதும் அவர்கள் அந்த வீட்டில் தங்கியிருப்பது இல்லை. சுற்றுலாவுக்கு வருவது போல் அவ்வப்போது அந்த வீட்டுக்கு வந்து சென்றனர்.

அப்படி வரும்போதும் பெண்களுடன் புது, புது ஆண்கள் வந்து சென்றனர். இதனால் அக்கம்பக்கத்தினருக்கு அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதுபற்றி அவர்கள் கருமத்தம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவத்தன்று அந்த வீட்டில் ஆட்கள் நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் தகவல் தெரிவிக்கவே போலீசார் அதிரடியாகச் சென்று சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு விபசாரம் நடப்பது தெரியவந்தது. அங்கு 2 பெண்கள் இருந்தனர். அவர்களிடம் விசாரித்தபோது அவர்கள் தாயும், மகளும் என தெரிவித்தனர். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் தொடர்ந்து விசாரித்தனர்.

இவர்கள் சூலூர் அருகே உள்ள ராசிபாளையத்தில் வசித்து வந்துள்ளனர். தாயாருக்கு 42 வயதாகிறது. கணவரை பிரிந்த அவர் வேறு ஒருவரை 2-வது திருமணம் செய்து கொண்டு வசித்து வந்தார். அந்த பெண்ணுக்கு முதல் கணவர் மூலம் ஒரு மகள் இருக்கிறார். அவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்தநிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மகள், தனது கணவரை பிரிந்து தாயாரின் தயவை தேடி வந்தார். தாயார், அவரது 2-வது கணவர் மற்றும் குழந்தைகளுடன் வந்த மகள் ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். அப்போது கணவரை பிரிந்து வந்த மகளை விபசாரத்தில் ஈடுபடுத்தி பணம் சம்பாதிக்கலாம் என அவரது தாயாரிடம் 2-வது கணவர் ஆசைவார்த்தை கூறி உள்ளார். பணத்துக்கு ஆசைப்பட்டு தாயாரும் தனது மகளை விபசாரத்தில் தள்ளினார்.

ஊரில் யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக கருமத்தம்பட்டி கிருஷ்ணாபுரத்தில் வாடகை வீடு எடுத்து அங்கு விபசார தொழிலில் ஈடுபட்டுள்ளனர். 2-வது கணவர் புரோக்கராக இருந்து ஆள்பிடித்து வந்துள்ளார். அப்படி வாடிக்கையாளர் யாராவது சிக்கினால் தாயுக்கும், மகளுக்கும் தகவல் தெரிவித்து அவர்களை கிருஷ்ணாபுரம் வீட்டுக்கு வரச் செய்வாராம். அங்கு குடும்ப பெண்கள் போல் தாயும், மகளும் சென்றுள்ளனர். பின்னர் அந்த வீட்டில் மகளை அந்த பெண் விபசாரத்தில் தள்ளியுள்ளார். அதில் அதிக பணம் கிடைக்கவே அதனையே அவர்கள் தொழிலாக மாற்றி செய்து வந்துள்ளனர்.

தற்போது அக்கம்பக்கத்தினர் புகாரால் போலீசில் அவர்கள் சிக்கிக் கொண்டனர். அவர்களில் தாயாரையும், அவரது 2-வது கணவரையும் போலீசார் கைது செய்தனர். விபசாரத்தில் தள்ளப்பட்ட பெண்ணை போலீசார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com