அரசு மருத்துவக்கல்லூரி விடுதியில் பயிற்சி பெண் டாக்டர் தற்கொலை

காயத்ரி தங்கி இருந்த அறையில் இருந்து அவர் எழுதி வைத்து இருந்த ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். காயத்ரி கடந்த 6 மாதங்களாக மன அழுத்தத்திற்கு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.
அரசு மருத்துவக்கல்லூரி விடுதியில் பயிற்சி பெண் டாக்டர் தற்கொலை
Published on

திருவாரூர்:

நாமக்கல் மாவட்டம் மோகனூரை சேர்ந்தவர் வேலுசாமி. லாரி டிரைவர். இவருடைய மகள் காயத்ரி (வயது 22). இவர், கடந்த 2017-ம் ஆண்டு நீட் தேர்வில் வெற்றி பெற்று கடந்த 4 ஆண்டுகளாக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் படித்து விட்டு தற்போது திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பயிற்சி டாக்டராக பணியாற்றி வந்தார்.

பயிற்சி டாக்டர்களுக்கான விடுதியில் தங்கி இருந்த காயத்ரி, கடந்த 2 நாட்களாக பணிக்கு செல்லவில்லை.

இதனால் அவரது தோழி, காயத்ரிக்கு போன் செய்தார். ஆனால் காயத்ரி போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த காயத்ரியின் தோழி நேற்றுமுன்தினம் இரவு காயத்ரி தங்கி இருந்த அறைக்கு சென்று கதவை தட்டினார். நீண்ட நேரம் தட்டியும் அறைக்கதவு திறக்கப்படவில்லை.

இதனால் கல்லூரி பாதுகாவலர் மற்றும் இதர பயிற்சி டாக்டர்கள் சேர்ந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனா். அப்போது அறைக்குள் மின்விசிறியில் நைலான் கயிற்றில் காயத்ரி தூக்கில் பிணமாக தொங்கினார்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருவாரூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் காயத்ரி தங்கி இருந்த அறையில் இருந்து அவர் எழுதி வைத்து இருந்த ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில் காயத்ரி என்ன எழுதி இருந்தார் என தெரியவில்லை.

காயத்ரி கடந்த 6 மாதங்களாக மன அழுத்தத்திற்கு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com