

சென்னை:
திருப்போரூர் ஒன்றியம் சிறுதாவூர் கிராமத்தில் 212 ஹெக்டர் பரப்பளவில் அமைந்துள்ள ஏரி பொதுப்பணித்துறை பராமரிப்பில் உள்ளது. தற்போது ஏரியில் பாதி நிலப்பரப்பில் தண்ணீர் தேங்கியும் மற்ற பகுதிகளில் வறண்டும் காணப்படுகிறது.
இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டரின் முறையான அனுமதி பெற்று ஒப்பந்த அடிப்படையில் ஏரியில் மண் எடுக்கும் பணிகள் நேற்று தொடங்கியது.
இதற்காக ஒப்பந்ததாரர் தரப்பில் பூமி பூஜை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மணல் எடுப்பதற்கு அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். விற்பனை செய்வதற்காக ஏரியில் இருந்து மணல் எடுக்க கூடாது என்று கூறி பணிகளை தடுத்து நிறுத்தினார்கள்.
மேலும் சாலை மறியலிலும் ஈடுபட முயன்றனர். இதையடுத்து ஒப்பந்ததாரர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது ஏரியில் மண் எடுக்க கூடாது என்று மாவட்ட கலெக்டரிடம் முறையிட உள்ளதாகவும், அதுவரை மணல் எடுக்க கூடாது என்றும் கிராம மக்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து ஒப்பந்ததாரர்கள் பணிகளை நிறுத்தினார்கள். பொதுமக்கள் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு கொடுக்க முடிவு செய்துள்ளனர்.