

வேலூர்:
வேலூர் அடுத்த துத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சின்னத்தம்பி (வயது 73). இவர் கடந்த 6-ந் தேதி சித்தேரியில் உள்ள கல்குவாரி குட்டையில் மீன் பிடிக்க செல்வதாக கூறிவிட்டு சென்றார்.
பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தினர் சின்னத்தம்பியை பல்வேறு இடங்களில் தேடினர்.
சித்தேரி கல்குவாரி குட்டைபகுதியில் சின்னத்தம்பியின் ஆடைகள் இருந்தன.
இதனால் அவர் கல்குவாரி தண்ணீரில் மூழ்கியிருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. இது குறித்து அரியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் வந்தனர். கல்குவாரியில் சின்னத்தம்பியை தேடும் பணி நடந்தது. நேற்று மாலை அரக்கோணம் பேரிடர் மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் நேற்று மாலை முதல் கல்குவாரி குட்டையில் சின்னத்தம்பியை தேடி வருகின்றனர்.
கல்குவாரிகுட்டை சுமார் 500 அடி ஆழம் உள்ளது. மேலும் தண்ணீருக்கு அடியில் முள் புதர்கள் உள்ளன. அதில் சின்னத்தம்பி சிக்கி இருக்கலாம். தொடர்ந்து 3-வது நாளாக தேடும் பணி நடந்து வருகிறது.