

திண்டுக்கல் அருகே சீலப்பாடி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் வசந்தபாண்டி (வயது 32). இவர் சீலப்பாடியில் உள்ள தனியார் பேக்கரியில் கேசியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி யாழினி என்ற மனைவியும், 2 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. திண்டுக்கல் முள்ளிப்பாடி அருகே செட்டியபட்டியை சேர்ந்தவர் பிரகாஷ் ராஜ் (25).
இவர் திருப்பூரில் தனியார் பனியன் கம்பெனியில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர்கள் 2 பேரும் நண்பர்கள்.இந்த நிலையில் பிரகாஷ்ராஜ் நேற்று வசந்தபாண்டியை சந்திப் பதற்காக திண்டுக்கல்லுக்கு வந்துள்ளார்.
பின்னர் செட்டியபட்டி செல்வதற்காக வசந்தபாண்டி மற்றும் பிரகாஷ்ராஜ் ஆகிய 2 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் திண்டுக்கல்&திருச்சி சாலையில் சென்றனர். அப்போது முள்ளிப்பாடி அருகே சென்ற போது நிலைதடுமாறி வசந்த பாண்டி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் சந்தனவர்த்தினி ஆற்றின் பாலத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த 2 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் வசந்த பாண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். பிரகாஷ்ராஜ் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாண்டி, சப்-இன்ஸ்பெக்டர் விஜய் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.