

செய்துங்கநல்லூர்:
செய்துங்கநல்லூர் தமிழன்நகரை சேர்ந்தவர் உதயக்குமார். ஜவுளி வியாபாரி. இவரது மனைவி சுதா. இவர் ஸ்ரீவைகுண்டம் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு அரவிந்த் மற்றும் ஆனந்த் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.
நேற்று மாலை மனைவியை அழைத்து வருவதற்காக உதயகுமார் சென்றுள்ளார். வீட்டில் அரவிந்த் மட்டும் தனியாக ஆன்லைன் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தார். அதை நோட்டமிட்ட 3 பேர் கொண்ட கும்பல் அரவிந்த் கழுத்தில் கத்தியை வைத்து வீட்டின் பீரோவை திறக்க கூறிஉள்ளனர்.
இதற்கிடையில் தந்தையும், தாயும் வீட்டிற்கு வந்துள்ளனர். அவர்கள் முன்னிலையில் மகனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி உள்ளனர். சுதா கழுத்தில் கிடந்த 7 பவுன் தாலிச்செயினை பறித்தனர். மேலும் வீட்டில் இருந்த 7.5 பவுன் நகையையும் எடுத்து சென்றனர்.
சம்பவ இடத்திற்கு செய்துங்கநல்லூர் இன்ஸ்பெக்டர் அருள், சப்-இன்ஸ்பெக்டர் கருத்தையா ஆகியோர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் கொள்ளையர்களை பிடிக்க ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி. வெங்கடேஷ், இன்ஸ்பெக்டர் அருள் ஆகியோர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
தனிப்படையினர் அங்குள்ள சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்தனர். மேலும் கொள்ளை நடந்த வீட்டில் இருந்த சிறுவனிடம் கொள்ளையர்கள் குறித்து விபரம் கேட்டனர்.
அவன் கூறும்போது, கொள்ளையில் ஈடுபட்ட 3 பேரும் முககசவம் அணிந்திருந்தனர். அதில் ஒருவன் சிறிது நேரத்தில் முககவசத்தை அகற்றினான். அப்போது அவனது முகத்தை நான் பார்த்தேன். எனவே மீண்டும் பார்த்தால் அடையாளம் காட்டுவேன் என்றான்.
தொடர்ந்து பழைய குற்றவாளிகளின் புகைப்படத்தை அவனிடம் காட்டினர். அப்போது அதில் ஒருவன் கொள்ளையில் ஈடுபட்டதை அடையாளம் காட்டினான்.
தொடர்ந்து சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட கைரேகையுடன், அவனது கைரேகைகளை ஒப்பிட்டு பார்க்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அதில் உறுதியானால் அவனை வைத்து மற்றவர்களை பிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இது தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது, கடந்த ஆண்டு இதேபகுதியை சேர்ந்த மற்றொரு தெருவில் உள்ள வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்தவர்களை கட்டிப்போட்டு 10 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றனர்.
இதில் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.
இந்நிலையில் மீண்டும் ஒரு கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. எனவே இதில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றனர்.