

கோவில்பட்டி:
உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்கள், ஆசிரியர்களின் கண்டுபிடுப்புத்திறன், தொழில்முனைவோரை உருவாக்கும் திறன், ஸ்டார்ட் அப், கற்பித்தல் மற்றும் கற்றலில் புதுமையான தொழில்முனைவு மற்றும் ஐ.பி.ஆர். தொடர்பான கல்வித் திட்டங்கள், புதுமையான
தொழில்முனைவுகளை மேம்படுத்துவதற்கு இன்குபேஷன் போன்ற பிரத்யேக உள்கட்டமைப்பு வசதிகள், கல்வி நிறுவனங்களின் நிதி ஆதரவுடன் புதுமையான யோசனைகளை உருவாக்கும் திறன் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு ‘புதிய கண்டுபிடிப்புகளில் சாதனை படைத்த கல்வி நிறுவனங்களுக்கான அடல் தரவரிசை’ (ஏ.ஆர்.ஐ.ஐ.ஏ.) என்னும் திட்டத்தை மத்திய கல்வி அமைச்சகம், அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் வாயிலாக செயல்படுத்தி வருகிறது.
ஏ.ஆர்.ஐ.ஐ.ஏ.-யின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி, ‘பதிவு செய்யப்பட்ட மொத்தம் 3,551 உயர்கல்வி நிறுவனங்களில், 1438 கல்வி நிறுவனங்கள் (அனைத்து ஐ.ஐ.டி.கள், என்.ஐ.டி.கள், ஐ.ஐ.எஸ்.சி. போன்ற கல்வி நிறுவனங்கள் உட்பட) இந்த தரவரிசை கணக்கீட்டில் பங்கேற்றன.
பொதுவாக, தொழில் நுட்பம் சார்ந்த கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே 5 பிரிவாக தரவரிசை வெளியிடப்படும். ஆனால் இந்த ஆண்டு முதல் தொழில்நுட்பம் சாராத கல்வி நிறுவனங்கள் 2 பிரிவாக சேர்க்கப்பட்டு, மொத்தம் 7 பிரிவுகளாக தரவரிசை தயாரிக்கப்பட்டு மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் டாக்டர் சுபாஷ் சர்க்காரால் வெளியிடப்பட்டது.
இதில் கோவில்பட்டி, நேஷனல் பொறியியல் கல்லூரி சிறந்த சுயநிதி தொழில்நுட்ப உயர்கல்வி நிறுவனங்களின் அடல் தரவரிசைப் பிரிவில் தேசிய அளவில் 10--வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
கல்லூரியின் கே.ஆர். புத்தாக்க மையம், என்.இ.சி.வணிக கருவகம், புதிய தலைமுறை கண்டு பிடிப்பு மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம் ஆகிய உள்கட்டமைப்புகளின் மூலமாகவும், கல்லூரியின் நிர்வாகம், இயக்குனர், முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களின் கூட்டு முயற்சியாலும் இச்சாதனையானது சாத்தியமாகியுள்ளது என்று கல்லூரி முதல்வர் காளிதாச முருகவேல் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் இச்சாதனைக்கு பங்கு வகித்த அனைவருக்கும் பாராட்டுக்களையும், நன்றிகளையும் கல்லூரியின் நிர்வாகம் மற்றும் இயக்குனரின் சார்பாக தெரிவித்துள்ளார்.