

திருச்சி:
திருச்சி முதலியார் சத்திரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 22). பிரபல ரவுடியான இவர் மீதுபல வழக்குகள் உள்ளது. இவருக்கும் வரகனேரி பென்சனர் தெருவை சேர்ந்த மிட்டாய் பாபு (32), உப்பு பாறை பிள்ளைமா நகர் பகுதியை சேர்ந்த டக்ளஸ் (29) உள்ளிட்ட இருவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது.
நேற்று முன் தினம் இரவு மணிகண்டன் தன்னுடைய மனைவிக்கு இரவு உணவு வாங்குவதற்காக கடைக்குச் சென்ற போது அங்கு வந்த மிட்டாய் பாபு, டக்ளஸ் உள்ளிட்ட ஐந்து பேர் மணிகண்டனை வழிபறித்து கடுமையான தாக்கி அரிவாளால் வெட்டி உள்ளனர். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் மணிகண்டன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து மணிகண்டன் பாலக்கரை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மிட்டாய் பாபு, டக்ளஸ் அரியமங்கலம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த கவியரசு (23), காந்தி மார்க்கெட் எடத்தெரு பிள்ளைமாநகரை சேர்ந்த ஜான் எமிலி கிறிஸ்டோபர் (23), அன்சாரி (23), வடசேரி பென்சனர் தெருவை சேர்ந்த சந்தோஷ் குமார் (21) உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மிட்டாய் பாபு மீது ஏற்கனவே 18 வழக்குகளும், ஜான் எமிலி கிறிஸ்டோபர் மீது ஐந்து வழக்குகளும் அன்சாரி மீது ஐந்து வழக்குகளும், சந்தோஷ் குமார் மீது 15 வழக்குகளும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.