

திருச்சி:
தா.பேட்டை சாராயக்கார தெரு பகுதியை சேர்ந்தவர் தங்கவேல். இவரது மனைவி மல்லிகா (வயது65). இவர் தா.பேட்டை அருகே மகாதேவி பகுதியில் வசிக்கும் தனது மகள் வீட்டிற்கு செல்வதற்காக நடந்து சென்றுள்ளார். தா.பேட்டை - நாமக்கல் செல்லும் மெயின்ரோட்டில் மகாதேவி உப்பாற்று பாலம் அருகே சாலையில் சென்ற போது, அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது மோதியது. இதில் மல்லிகா பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தா.பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி மற்றும் போலீசார் மல்லிகாவின் உடலை கைப்பற்றி துறையூர் அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிந்து மூதாட்டி மீது மோதி நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரித்து வருகின்றனர்.