2 நாட்களுக்கு பிறகு பழைய குற்றாலம், ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி-மெயினருவியில் 3-வது நாளாக தடை

மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள பகுதிகளில் பரவலாக மழை நீடித்து வருகிறது.இன்று காலை ஐந்தருவி, பழையகுற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மெயினருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தை படத்தில் காணலாம்.
மெயினருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தை படத்தில் காணலாம்.
Published on

தென்காசி:

தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள தென்காசி, செங்கோட்டை, ஆய்க்குடி, சிவகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் பரவலாக மழை நீடித்து வருகிறது. அதிகபட்சமாக ஆய்க்குடியில் 5 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் கனமழையால் குற்றாலம் அருவிகளில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு நீடித்து வருகிறது. இதனால் அங்கு கடந்த 2 நாட்களாக சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க அனுமதி வழங்கப்படவில்லை.

குளிக்க அனுமதி

இந்நிலையில் இன்று காலை நீர்வரத்து சீரானதை தொடர்ந்து ஐந்தருவி, பழையகுற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே நேரம் மெயினருவியில் மட்டும் 3-வது நாளாக தடை நீடித்தது.

அங்கும் நீர்வரத்து சீரான பிறகு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மெயினருவிக்கு வந்த சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் பழையகுற்றாலம் அருவி மற்றும் ஐந்தருவியில் குளிக்க சென்றனர்.

அணை நிலவரம்

அணை பகுதிகளை பொறுத்தவரை கடனா அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 25 மில்லிமீட்டரும், குண்டாறில் 18.6 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. தொடர்மழையின் காரணமாக கடனா அணை நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 71.80 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 79.25 அடியாகவும் உள்ளது.

குண்டாறு அணையில் 34.50 அடி நீர் இருப்பு உள்ளது. அடவிநயினார் கோவில் அணை நீர்மட்டம் 3 அடி உயர்ந்து 63 அடியாக உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் நெல் மற்றும் வாழை சாகுபடி பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com